பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவைத் தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என நேற்று ஜூலை 1ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானிடம் 18ஆவது முறையாக கோரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலூசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கு விசாரணையில் இந்தியா மேல்முறையீடு செய்ய ஆறு மாத காலம் அவகாசம் கேட்டதாகவும், இதை மறுத்த சர்வதேச நீதிமன்றம் வருகிற செப்டம்பர் மாதம் மனு தாக்கல் செய்ய வேண்டும் என இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன. மேலும், பாகிஸ்தான் பதில் மனு தாக்கல் செய்ய டிசம்பர் வரை சர்வதேச நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தியா குல்பூஷன் ஜாதவைச் சந்திக்க பலமுறை பாகிஸ்தானிடம் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனாலும், அனுமதி வழங்கப்படவில்லை. கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்த பட்டியல் பரிமாற்றத்தின் போது, குல்பூஷன் ஜாதவைச் சந்திக்க அனுமதி கேட்டு, கோரிக்கை விடப்பட்டது. ஜாதவ் தவிர்த்து, பாகிஸ்தான் சிறையில் உள்ள ஹமீத் நேகல் அன்சாரி என்பவரையும் சந்திக்க அனுமதி வழங்கும்படி கேட்கப்பட்டது. இந்த ஹமீத் நேகல் அன்சாரி கடந்த 2012ஆம் ஆண்டு இணையம் மூலம் நண்பரான தனது தோழியை சந்திக்க ஆப்கானிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக அந்நாட்டு போலீஸ் அவரைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அரசு வழங்கிய கைதிகள் பட்டியலில், 494 இந்திய மீனவர்களும் இந்தியாவைச் சேர்ந்த 52 மக்களும் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் ஜாதவைச் சந்திக்க அனுமதி கேட்டு கோரிக்கை விடப்பட்டுள்ளதை இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று ஜூலை 1ஆம் தேதி உறுதி செய்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் சிறையிலுள்ள குல்பூஷன் ஜாதவைச் சந்திக்க இந்தியா 18ஆவது முறையாக முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
�,”