குஜராத் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு 3 எம்.பி.-க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு குஜராத் சட்டசபை வளாகத்தில் வாக்குப்பதிவுடன் தொடங்கியது.
குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பாஜக சார்பில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, பல்வந்த்சிங் ராஜ்புத் மற்றும் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 3 இடங்களுக்கு 4 பேர் போட்டியிடும் நிலையில் ஆளும்கட்சி சார்பில் அகமது பட்டேலை தோற்கடிக்கத் தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநில எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் பாஜக-வைச் சேர்ந்த அமித்ஷா, ஸ்மிருதி இராணியும், காங்கிரசைச் சேர்ந்த அகமது பட்டேல் ஆகியோரும் எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும். குஜராத் மாநில சட்டசபையில் பாஜக-வுக்கு 121 எம்.எல்.ஏ.-க்களும், காங்கிரசுக்கு 51 எம்.எல்.ஏ.-க்களும் உள்ளனர். இந்தத் தேர்தலில், ஒரு எம்.பி. வெற்றி பெறுவதற்கு 45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதன்படி பாஜக-வுக்கு 121 எம்.எல்.ஏ.க்களில் 90 பேர் போக மீதம் 31 பேர் உள்ளனர். காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது. எனவே அகமது பட்டேல் வெற்றி பெற இன்னும் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டு தேவை. பாஜக-வின் 3-வது வேட்பாளரான பல்வந்த்சிங் ராஜ்புத்துக்கு 31 ஓட்டுகளே கிடைக்கும். அவர் வெற்றி பெறுவதற்கு மேலும் 14 ஓட்டுகள் தேவைப்படுகிறது.
இந்நிலையில், குஜராத் மாநில காங்கிரசின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சங்கர்சிங் வகேலா காங்கிரசில் இருந்து விலகியபோது, அவருக்கு ஆதரவாக 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்து பாஜக-வில் சேர்ந்தனர். அதையடுத்து, சட்டசபையின் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 182-ல் இருந்து 176 ஆகவும் காங்கிரசின் பலம் 51 ஆகவும் குறைந்தது. அதைத்தொடர்ந்து, காங்கிரசுக்கு உரிய மொத்தமுள்ள 51 எம்.எல்.ஏ.-க்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பாஜக-வினர் கடத்திச் சென்று விடக்கூடாது என்று கருதி காங்கிரசின் 44 எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள ஈகிள்டன் என்ற சொகுசு விடுதியில் 2 வாரம் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, அவர்களுடன் 7 எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு செல்லவில்லை. இவர்கள் வகேலாவின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று தெரியவருகிறது.
காங்கிரசின் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 1 எம்.எல்.ஏ. உள்பட மொத்தம் 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தெரிய வருகிறது. அதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளரான அகமது பட்டேல் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இன்று நடைபெறும் எம்.பி.க்கள் தேர்தல் வாக்குச் சீட்டில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிப்பதற்காக ‘நோட்டா’ வசதியும் சேர்க்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 4 மணி வரை எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை வளாகத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளதாக மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.�,