வயிற்றுக்கு இதமளிக்கும் இடியாப்பம்
தமிழில் ‘நூல்புட்டு’, கன்னடத்தில் ‘நூபுட்’, மலேஷியாவில் ‘புட்டுமாயம்’ என்று அழைக்கப்படும் இடியாப்பம் இலங்கை வரை பிரபலமான ஓர் உணவு. எளிய, ஆரோக்கியமான காலை உணவு இடியாப்பத்தை உதிர்த்து, உப்புமாவாக்கலாம். இதை ‘சேவை’ என்றும் சொல்வார்கள். இதைக்கொண்டு எலுமிச்சை, தக்காளி, புளி என விதவிதமாக ‘சேவை’ செய்து ருசிக்கலாம். இடியாப்பத்தில் பிரியாணி செய்பவர்கள்கூட உண்டு. இன்று காய்கறி கலவையுடன் வெஜிடபிள் இடியாப்பம் செய்வோம்.
**என்ன தேவை?**
இட்லி அரிசி – 200 கிராம்
கேரட் துருவல், வெங்காயத்தாள் (பொடியாக நறுக்கியது), கோஸ் துருவல் – தலா ஒரு கப்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நெய் – 4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெயை விட்டு, கரைத்து வைத்து இருக்கும் மாவை ஊற்றி, கெட்டியாகக் கிளறவும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். மாவு வெந்ததும் நன்கு பிசையவும். மாவைச் சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டவும். அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, உருண்டைகளைப் போடவும். உருண்டைகள் வெந்ததும் எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு, கேரட் துருவல், வெங்காயத்தாள், கோஸ் துருவல், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். பிழிந்து வைத்திருக்கும் இடியாப்பத்துடன் வதக்கிய காய்கறி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
**என்ன பலன்?**
காய்கறிகளில் நிறைய வைட்டமின்களும் இடியாப்பத்தில் நமக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே, உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். எண்ணெய் சேர்க்காத ஆவியில் வேகவைத்துச் செய்யப்படுவது என்பதால், வயிற்றுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, நோயின் தன்மைக்கேற்ப இடியாப்பம் செய்து, மற்றவற்றுடன் கலந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க ஏற்ற உணவு இந்த வெஜிடபிள் இடியாப்பம்.�,