‘மண்பானை சமையல்’ என்றால் தேடிப்போய் சாப்பிடும் காலம், கொ.மு. காலம். இப்போது தேடிப்போய் சாப்பிடும் நிலைமாறி உணவகத்துக்குச் சென்று சாப்பிடுவது என்பதே இல்லை என்றாகிவிட்டது. இந்த நிலையில் வீட்டிலேயே சுவையான இந்த மண்பானை கோழி பிரியாணி செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.
**என்ன தேவை?**
கோழி – ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி – முக்கால் கிலோ
வெங்காயம் – ஒன்று
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
தயிர் – கால் கப்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – முக்கால் டீஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி இலைகள் – ஒரு கைப்பிடி அளவு
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 5
அன்னாசிப்பூ – 4
பிரியாணி இலை – 4
எலுமிச்சைச்சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
மைதா – 2 கப்
உப்பு – 2 டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் கோழி துண்டுகள், முக்கால் பகுதி வெங்காயம், பாதி கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள், மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், தயிர், இஞ்சி – பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும். அனைத்தையும் நன்கு கலந்து, 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும். மைதா மாவைத் தண்ணீர் சேர்த்து, சிறிது பிசுபிசுப்பான பதத்துக்குப் பிசைந்து வைத்துக்கொள்ளவும்..
அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, பாதி அளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும், பாஸ்மதி அரிசியைச் சேர்த்து முக்கால் பதம் வேகவிடவும். வெந்தவுடன் தண்ணீரை வடித்து, பின் ஒரு தட்டில் போட்டு உலரவிடவும்.
ஒரு மண்பானையைச் சூடாக்கி, நெய், எண்ணெய் சேர்த்து காயவிட்டு, மீதியுள்ள பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய் சேர்க்கவும். பிறகு ஊறவைத்த கோழி மசாலாவையும் சேர்த்துக்கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து, வேகவைத்து உலரவிட்ட பாஸ்மதி அரிசியைச் சேர்த்துக்கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மீதமிருக்கும் கொத்தமல்லி இலை, புதினா தூவி, ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கவும். கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொள்ளவும். பிசைந்த மைதா மாவை நீளமாகத் திரட்டி பானையின் வாய்ப் பகுதியில் ஒட்டவும். பிறகு மூடியை மேலே வைத்து அழுத்தி மூடவும். சிறிதும் இடைவெளியின்றி மீதமிருக்கும் மாவால் ஒட்டி மூடிவிடவும். மிதமான தீயில் 20 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி 10 நிமிடங்கள் ஆவி அடங்கவிடவும். கத்தி அல்லது ஸ்பூன் கொண்டு ஒட்டிய மாவை வெட்டி மூடியைத் திறக்கவும். மெதுவாக அடிவரை கிளறிவிடவும். சூடான மண்பானை கோழி பிரியாணி தயார்.
[நேற்றைய ரெசிப்பி: கொத்துக்கறி பிரியாணி](https://www.minnambalam.com/k/2020/08/04/1)�,