காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து புதிய ஆட்சியை அமைக்கும் தீவிர முயற்சியில் இருந்த நிலையில், திடீரென நேற்று (நவம்பர் 21) இரவு மாநில சட்டமன்றத்தைக் கலைத்திருக்கிறார் ஆளுநர் சத்யபால் மாலிக்.
முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா தான் ஆட்சி அமைப்பது குறித்து உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் சட்டமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லா, “நாங்கள் கடந்த ஐந்து மாதமாகவே சட்டமன்றத்தைக் கலைக்க வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மெகபூபா இப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அனுப்பிய நிலையில் சட்டமன்றம் கலைக்கப்பட்டிருப்பது என்பது வேறு விதமான தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லியுள்ளார்.
பாஜக தவிர மற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றன என்று தெரிந்த பின் சட்டமன்றத்தைக் கலைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
மொத்தம் 87 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காஷ்மீர் சட்டமன்றத்தில் மக்கள் ஜனநாயக் கட்சி 28 உறுப்பினர்களையும், தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களையும் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 12 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்தால், இந்த அணிக்கு 55 உறுப்பினர்கள் அதாவது பெரும்பான்மைக்கு அதிகமாகவே ஆதரவு இருக்கிறது. பாஜக 25 இடங்களும், மக்கள் மாநாட்டுக் கட்சி 2 இடங்களும் பெற்றுள்ளன.
�,”