b>ஓசை காளிதாசன்
தொழில் புரட்சிக்குப் பின் தொடங்கிய இயற்கை வளங்களை சூறையாடும் ‘வளர்ச்சி’ பணிகளால் இன்று பல நகரங்களில் வாழத் தகுதி இல்லாத அளவுக்கு உயிர்காற்று கெட்டுப்போய் கிடக்கிறது. காலங்காலமாய் உயிரோட்டமாய் இருந்த பல ஆறுகள் செத்துக் கிடக்கின்றன. நீர்நிலைகள் சிதிலமடைந்து விட்டன. அறமற்ற வணிக முறையால் தண்ணீர் விற்பனை தலைவிரித்தாடுகிறது. நாளை நம் குழந்தைகள் முதுகில் காற்றுக் குடுவைகளைத் திணிக்கவும் காத்திருக்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சிக்கல்கள் உச்சத்திற்கு மாறிய மோசமான காலம். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை நமது காடுகளின் நிலை பெரும் வியப்பையும் நம்பிக்கையையும் தருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் காற்று மோசமாகியுள்ளது. நீர்நிலைகள் பாழடைந்து உள்ளன. ஆனால் நமது காடுகளின் பாதுகாப்பு ஒப்பீட்டளவில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்தச் செய்தி பலருக்கு வியப்பைத் தரலாம். ஆனால் நமது கானக நிலையை கவனித்து வருபவர்கள் கூறும் செய்திகள் வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகின்றன.
கடந்த 20 ஆண்டுகளில் டாப்சிலிப் பகுதிக்கு சென்று வருபவர்கள் அங்குள்ள கானக செழுமையையும் உயிர்ச்சூழல் வளமையும் கண்டு பெரு மகிழ்ச்சி கொள்வர். தங்கியுள்ள இடத்தைச் சுற்றி மாலைப் பொழுதில் மான்கள், காட்டு மாடுகள், காட்டுப்பன்றிகள், சில நேரங்களில் யானைக் கூட்டம் வந்து போவதை மிரட்சியுடன் காணலாம். அங்கிருந்து யானை முகாம் உள்ள கோழிக்கமுத்தி பகுதிக்கும் கேரளத்தின் பரம்பிக்குளம் பகுதிக்கும் சென்று வருபவர்கள் வழியில் கண்ட வன விலங்குகளை பற்றி வியப்புற கூறுவதை நாம் அறிவோம் . அவ்வப்போது சிறுத்தை, புலி போன்ற பெரும் பூனைகளை பார்த்த பெருமிதத்தையும் பலர் பகிர்ந்துகொள்வர்..
ஆனால் அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு இருந்த நிலையை அறிந்தால்தான் அங்கு ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க மாற்றத்தை உணர முடியும்.
தமிழக வனத்துறையை நன்கு அறிந்தவர்களுக்கு தவிர்க்க இயலாத பெயர் தங்கராஜ் பன்னீர்செல்வம். இன்றைய ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர். அண்மையில் ஓய்வு பெற்ற வனச்சரகர். யானை, சிறுத்தை , புலி போன்ற காட்டுயிர்கள் மனிதக் குடியிருப்பு பகுதிக்கு வந்து உடமைக்கும் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்போது அந்த விலங்குகளை திரும்பவும் காட்டுக்கு அனுப்பும் சிக்கலான பணி நடைபெறும் பெரும்பாலான இடங்களில் தங்கராஜ் பன்னீர்செல்வம் முன்னணியில் களப்பணியாற்றிக் கொண்டிருப்பார்.
அவருடைய தந்தையும் வனத் துறையில் இப்பகுதியில் பணியாற்றியவர். எனவே பள்ளிப்பருவம் முதல் டாப்சிலிப், வால்பாறை போன்ற இடங்களில் இருந்தவர் . அவர் 1970-களில் அங்கிருந்த நிலைமையை பற்றி கூறும் செய்தி பெரும் வியப்பைத் தரும்.
இப்போது அங்கு சுற்றுலா செல்பவர்கள் டாப்சிலிப்பில் இருந்து யானை முகாம் உள்ள கோழிகமுத்திவரை வனத்துறை வாகனத்தில் சென்று வரலாம். ஆனால் கோழிகமுத்திக்கு அப்பாலும் ஒரு ஜீப் பாதை செல்கிறது. அந்தப் பாதையில் சில கிலோ மீட்டர் தொடர்ந்தால் ஆனைக்குந்திசோலை என்னும் அடர்ந்த சோலை வரும். அதற்கும் அப்பால் சென்றால் வரகளியாறு என்ற இடத்தை அடையலாம். அங்கிருந்து சில கிலோமீட்டர் கடந்தால் காட்டின் நடுவே மலைமலசர் பழங்குடிகள் வாழும் கூமாட்டி என்னும் குடியிருப்பு வரும். நாலா பக்கமும் காடு சூழ்ந்த அந்த உலகில் இன்றும் பழங்குடிகள் வாழ்வு சாத்தியமாகிறது. அங்கிருந்து பயணம் தொடர்ந்தால் மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தை அடையலாம். மானாம்பள்ளியிலிருந்து வால்பாறை செல்ல தார் சாலையும் பேருந்து வசதியும் உண்டு. டாப்சிலிப்பில் இருந்து மானாம்பள்ளிவரை உள்ள அந்தப் பகுதி இன்று காட்டுயிர்களின் பெரும் வாழ்விடமாக திகழ்கிறது. எவ்வித இடையூறுமின்றி புலி, சிறுத்தை, யானை போன்ற பேருயிர்களும் ஏராளமான சிறு உயிர்களையும் அங்கு காணலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் ஐந்து வகை குரங்கினங்களும் நாலு வகை மானினங்களும் வாழும் அரிய வாழ்விடம் அது. வழி நெடுக காணும் காட்டு மரங்களும் தாவர செழுமையும் நம்மை வியக்கவைக்கும் .
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கூட சில குடும்பங்கள் வாழ்ந்த வரகளியாறு இப்போது மனித நடமாட்டம் இன்றி காட்டுயிர்களின் அமைதியான வாழ்விடமாக மாறியுள்ளது. தேவைப்படும்போது அங்குள்ள கரால்கள் புதிதாக பிடிக்கப்படும் யானைகளை பழக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் 1970களில் அந்த இடம் ஒரு நகர் போல் காணப்படும் என திரு தங்கராஜ் கூறுகிறார். மானாம்பள்ளியிலிருந்து வரகளியார் வழியாக சென்னைக்கு பஸ் போக்குவரத்து இருந்ததாக அவர் கூறியதைக் கேட்டு வியப்படையாமல் இருக்கமுடியாது. அதேபோல் பரம்பிக்குளத்திலிருந்தும் சென்னைக்கு பஸ் போக்குவரத்து இருந்துள்ளது. பரம்பிக்குளம். மானாம்பள்ளி தூணக்கடவு போன்ற அணைக்கட்டுகளின் கட்டுமானப்பணி நடைபெற்றதால் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு பணி ஆற்றியுள்ளனர். அதேபோல் வனத்துறையால் மரம் வெட்டும் பணி சட்டபூர்வமாக நடைபெற்றுள்ளது. ‘குமரி கல்ச்சர்’ என்று அழைக்கப்படும் காடு வளர்ப்பு முறை அங்கு நடைமுறையில் இருந்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக அழிந்து போய் இருந்த அந்த காட்டில் தேக்கு மரங்களை வளர்க்கும் ஒரு முயற்சி அது. அதன்படி பொதுமக்களுக்கு அந்த காட்டுப் பகுதி விவசாயம் செய்ய அனுமதிக்கப்படும். அவர்கள் விவசாயம் செய்து கொண்டே அங்கு தேக்கு மரங்களை வளர்க்க வேண்டும். இதுதான் அந்த முறை. எனவே அருகிலுள்ள கேரளப் பகுதியில் இருந்து இங்கு வந்து ஆயிரக்கணக்கானோர் மரவள்ளிக்கிழங்கு விவசாயம் செய்யத் தொடங்கினர். எனவே அந்தக் காடு முழுவதும் மனித நடமாட்டம் இருந்துள்ளது. இந்த வேலைக்கு அங்குள்ள பழங்குடி மக்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர்.
காட்டு யானைகளைப் பிடித்து பழக்கும் பணியும் அங்கு நடைபெற்றுள்ளது . எனவே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த இடமாக வரகளியார் இருந்துள்ளது. அப்போது அப்பகுதியில் வனவிலங்குகளை காண்பது மிகவும் அரிது என்கிறார் திரு தங்கராஜ். ஆனால் இன்று பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகமாக மாறியுள்ளது.
டாப்சிலிப், வால்பாறை பகுதி மட்டுமல்ல ஏறக்குறைய தமிழக காடுகள் அனைத்திலும் இந்த நிலையே இருந்திருக்கிறது.
அப்போது இருந்த நிலை பற்றி சத்தியமங்கலம், நீலகிரி, களக்காடு ஆகிய பகுதிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் திரு பத்ரசாமி விளக்கினார்.
1970க்கு முன்பு வரை வனத்துறையில் கூப்புமுறை (copse system) நடைமுறையில் இருந்தது. அதன்படி பல்வேறு காரணங்களுக்காக காட்டில் மரங்கள் வெட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. பலகைகளுக்காக ஈட்டி, தேக்கு, வாகை போன்ற மரங்கள் வெட்டி விற்கப்பட்டன. சந்தன மரங்கள் வெட்ட தனியாக விதிமுறைகள் இருந்தன. ரயில்களை இயக்க, தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்த என பெருமளவு விறகு தேவைப்பட்டது. எனவே எரிபொருள் தேவைக்காகவும் மரங்கள் வெட்ட விதிகள் வகுக்கப்பட்டன. இவை தவிர காகித ஆலைகளுக்கு மூங்கில்கள் வெட்ட அனுமதிக்கப் பட்டது. மூங்கில் தூறு முற்றிலும் அழியாதவாறு வெட்டப்பட வேண்டும் என விதி முறைகள் இருந்தாலும் பெரும்பாலும் முழுத் தூறும் வெட்டி அழிக்கப்பட்டது. சுமார் 50,000 மூங்கில் தூறுகள் விதி மீறி வெட்டப்பட்டதாக ஒரு வனச்சரகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த வரலாறு உண்டு.
இவைத் தவிர பொதுமக்கள், வணிக நிறுவனங்களின் விறகு தேவையும் காடுகளைச் சார்ந்தே இருந்துள்ளது. கடம்பூர் மலையடிவார கிராமங்களில் உள்ள கோவில் மைதானங்களில் தினமும் 150 க்கும் மேற்பட்ட விறகு சுமைகள் விற்பனைக்கு வரும். விறகு வெட்டுதல் பலரின் வாழ்வாதாரமாக இருந்தது ” என்கிறார் அவர்.
அதேபோல் நீலகிரி, வால்பாறை பகுதிகளில் அரசால் இயற்கை காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன
இன்று புகழ்பெற்ற புலிகள் காப்பகமாக உள்ள சத்தியமங்கலம் காட்டில் மோயாற்றங்கரை , திறந்தவெளி கேளிக்கை விடுதி போல் காணப்பட்ட காலம் உண்டு.
ஆனால் அந்த நிலை மாறியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் காட்டின் நிலையை கவனித்தால் அண்மைய 20 ஆண்டுகளில் காடு பெருமளவில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முதன்மையான காரணம் 1980-ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட இந்திய காடுகள் பாதுகாப்பு சட்டமாகும். காடுகளை மேலாண்மை செய்ய 1878 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1882 ஆம் ஆண்டிலேயே தமிழக காடுகள் சட்டம் உருவாக்கப்பட்டது . 1927 ஆம் ஆண்டு இந்திய வனச்சட்டம் காடுகளை மேலாண்மை செய்ய விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால் முந்தைய சட்டங்களுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள காடுகள் பாதுகாப்பு சட்டத்திற்கும் பெரிய வேறுபாடு உண்டு. முந்தைய சட்டங்கள் வன மேலாண்மையை வலியுறுத்தினாலும் காடுகளில் இருந்து கிடைக்கும் வருமானம் சார்ந்து பொருளாதார அடிப்படையில் உருவாக்கப் பட்டவை. ஆனால் 1980 ஆம் ஆண்டு சட்டம் காட்டின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு சூழலியல் பார்வையில் உருவாக்கப்பட்டது. அச்சட்டம் இல்லை எனில் பல்வேறு காரணங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டிருக்கும். இன்று மிச்சமுள்ள காடுகளும் இல்லாமல் போயிருக்கும்
பழங்குடிகள் மட்டுமே வாழ்ந்தவரை காடு சேதாரம் இல்லாமல் இருந்தது. வெள்ளைக்காரர்கள் காலத்தில் நமது காட்டு மரங்கள் வணிகரீதியாக வெட்டப்படுவது தொடங்கப்பட்டாலும் விடுதலைக்குப் பிறகு கட்டுப்பாடின்றி அழிக்கப்பட்டன. அந்த அழிவு செயல்களுக்கு பெரும் தடையாக அமைந்தது 1980ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டமாகும். அந்த சட்டம் இயற்றப்பட காரணமான முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்களை அரசியல் வேறுபாடுகளை தாண்டி அனைவரும் பாராட்டியாக வேண்டும். அவர்தான் 1972 ஆம் ஆண்டிலேயே இந்திய காட்டுயிர் சட்டம் கொண்டு வந்து உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு நமது காட்டுயிர்களுக்கு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தியவர்.
நமது காடுகள் காப்பாற்றப்பட மற்றுமொரு முக்கிய காரணம் சமையல் எரிவாயு அடுப்புகள் பெருமளவில் நடைமுறைக்கு வந்ததுதான். 1980 களில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரிக்கு பேருந்தில் செல்பவர்கள் மலைப் பாதையிலிருந்து அங்குள்ள சமவெளி காட்டை பார்த்தால் நாட்டின் வரைபடத்தில் உள்ள கோடுகளை போல் காடு முழுக்க பாதைகளாக இருக்கும். அவை விறகுக்காக மக்கள் சென்று வந்த பாதைகள். இப்போது அப்பகுதி மனித நடமாட்டம் இன்றி பாதுகாப்பாக இருப்பதை காணலாம்.
சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்த இயலாதபோது எவ்வித பயனும் ஏற்படாது. லஞ்ச ஒழிப்பு உள்ளிட்ட பல சட்டங்கள் எவ்வித பயனும் இன்றி இருப்பதை அறிவோம்.
ஆனால் இந்திய வனப் பாதுகாப்பு சட்டத்தை இயன்றவரை நடைமுறைப்படுத்தி வனத்துறை தமிழக காட்டை பாதுகாப்பாக வைத்துள்ளது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும்.
தமிழக வனத்துறை 1856 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 160 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு பாரம்பரியமிக்கத் துறை. கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது நமது காடு பெருமளவில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் அதிகார பலத்தோடு செயல்பட்ட மரம் வெட்டிகள் , வல்லமை படைத்த புகழ்பெற்ற வேட்டைக்காரர்கள் என பலர் இருந்தார்கள். இன்று அந்த நிலை இல்லை. அப்படி எனில் மரம் வெட்டப்படுவதும் கள்ள வேட்டையும் அடியோடு இல்லை என்று அர்த்தம் அல்ல. ஆனால் ஒரு காலத்தில் வெளிப்படையாக செயல்பட்ட பெரிய மரம் வெட்டிகள், வேட்டைக் காரர்கள் இன்று இல்லை. அக்கறையோடு செயல்பட்ட வனத்துறை அலுவலர்களும் பணியாளர்களும் இதனை சாத்தியமாக்கி உள்ளனர்.
இப் பாதுகாப்புப் பணியை அவர்கள் எளிதாக செய்துவிடவில்லை.
இந்திய ஆட்சிப் பணிக்கு(IAS) நிகரானதாக இந்திய வனப் பணி (IFS) கருதப்பட்டாலும் வனத்துறை பல நேரங்களில் அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட துறையாகவே உள்ளது. அதற்கு முக்கிய காரணம் வனத்துறை மூலம் அரசுக்கு நேரடியாக வருமானம் கிடைப்பதில்லை. ஆட்சியாளர்கள் விரும்பும் பல திட்டங்களை செயல் படுத்த அனுமதி மறுக்கும் துறையாகவும் உள்ளது.
பிற துறைகளால் வெறுக்கப் படுவதாகவும் வனத்துறை உள்ளது. ஏனெனில் சாலை அமைத்தல், அணை கட்டுதல், வாய்க்கால் வெட்டுதல், மின்பாதை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை காடுகளில் செயல்படுத்த திட்டமிடும்போது கானக சட்டப்படி அவற்றுக்கு அனுமதி வழங்க மறுத்து விடுகின்றனர். பல இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் மாவட்ட வன அலுவலர் எதிரியாக பார்க்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களாலும் விரும்பப்படாதவர்களாகவே வனத்துறையினர் உள்ளனர். ஏனெனில் விறகு வெட்டுதல், கால்நடை மேய்த்தல் என காட்டுக்குள் நுழைய தடை போடுவார்கள். பல இடங்களில் காடுகளிலுள்ள வழிபாட்டுத் தளங்களுக்கு செல்லவும் கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதிக்கின்றனர். இவற்றோடு காட்டு விலங்குகளால் பயிர் சேதம், உயிர் சேதம் ஏற்படும் போதும் மக்களின் வெறுப்பு வனத்துறை மீது திரும்புகிறது.
இப்படி அரசால், பிற துறைகளால், மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டு பல அவமானங்களை தாங்கிக்கொண்டு பணியாற்றிய பல வனத்துறை அலுவலர்களாலும் களப்பணியாளர்களாலும்தான் காடு காப்பாற்றப்பட்டுள்ளது.
வனத்துறை முற்றிலும் புனிதமானது அல்ல. எல்லா துறைகளிலும் உள்ள சீர்கேடுகள் பல இத்துறையில் உள்ளன. ஆனாலும் காட்டையும் காட்டுயிர்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற அற்பணிப்பு மிக்கவர்கள் அத்துறையில் இருப்பதாலேயே காடு பாதுகாக்கப்பட்டுள்ளது. எல்லா தடைகளையும் மீறி அவர்கள் காப்பாற்றி வைத்த காடுகள்தான் நமக்கு குடிநீரை தருகின்றன. பூமி சூடாகும் சூழலில் கானக மரங்களின் தேவை எதிர்காலத் தலைமுறையின் வாழ்வுக்கு எத்தகையது அவசியம் என்பதை அறிவோம். காட்டு விலங்குகளால் பாதிப்புக்கு உள்ளாகும் மனிதர்களின் குரல் பல நேரங்களில் ஓங்கி ஒலிக்கிறது. ஆனால் மனிதர்களால் வாழ்விடங்களையும் வலசைப் பாதைகளையும் இழந்த காட்டுயிர்களின் குரலாகவும் காவலர்களாகவும் வனத்துறையினரே உள்ளனர்.
காவல்துறை போல் வனத்துறையினரும் சீருடை பணியாளர்கள் என்றாலும் காவல்துறைக்கு தரும் பல வசதிகள் வனத்துறைக்கு வழங்கப்படுவதில்லை. தொலை தூரங்களில் உள்ள காடுகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்பு வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.
தற்போது தமிழக வனத்துறையில் 46 வன கோட்டங்களும் 53 சிறப்பு கோட்டங்களும் உள்ளன. அவற்றுக்கு மாவட்ட வன அலுவலர்கள் உள்ளனர். அவர்களின் கீழ் 542 வனச்சரகர் 1296 வனவர்கள் 2304 வனக்காப்பாளர்கள் 1606 வன காவலர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஏறக்குறைய 5,700 பேர். தமிழகத்தின் மொத்த பரப்பில் 17.5 9 விழுக்காடு நிலப்பரப்பு அதாவது 22697 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள காட்டை இவர்கள் பாதுகாக்கின்றனர். இந்த எண்ணிக்கை 50 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. தமிழக காடு 1370 வன சுற்றுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு வனக்காப்பாளர் ஒரு வன காவலர் என இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் ஏறக்குறைய 3000 ஹெக்டருக்கும் மேல் பரப்பளவுள்ள காட்டைப் பாதுகாக்க வேண்டும். அங்கு வேட்டைத் தடுப்பு, தீத்தடுப்பு மரம் வளர்ப்பு போன்ற செயல்பாடுகளோடு காட்டை விட்டு வெளியே வரும் வன விலங்குகளை விரட்டும் பணியையும் செய்தாகவேண்டும். நிரந்தரப் பணியாளர்கள் பற்றாத பகுதிகளில் தற்காலிக பணியாளர்கள் என வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் சொற்ப ஊதியத்தில் இரவு பகலாக பணியாற்றுகின்றனர். இந்த களப் பணியாளர்களின் அயராது உழைப்பினால்தான் காடுகளும் காட்டுயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளன.
கடந்த 25 ஆண்டுகளாக கணிசமான அளவு காட்டு விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டுவரை ஒரு புலிகள் காப்பகம்தான் தமிழகத்தில் இருந்தது. தற்போது 4 காப்பகங்கள் உருவாகியுள்ளன . இவையெல்லாம் காடுகள் பாதுகாக்கப்பட்டதற்கான குறியீடுகள் ஆகும். காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கட்டுரை எழுதுவது, மேடையில் பேசுவது என்பது வேறு
ஆனால் அவற்றை பாதுகாக்க களப் பணியாற்றுவது என்பது எளிதான செயல் அல்ல . எனவே இந்த கானக நாளில் அத்தகைய பணி செய்வோரை பாராட்டுவோம்.
அக்கறையோடு உருவாகியுள்ள பல சூழலிய அமைப்புகளும் அர்ப்பணிப்புள்ள சில தனி நபர்களும் தமிழகக் காடுகளின் பாதுகாப்பு அதிகரித்துள்ளமைக்கு மற்றுமொரு முக்கியக் காரணம் ஆகும் . அவர்களின் தொடர் கண்காணிப்பால் பல வனக் குற்றங்களும் ஆக்கிரமிப்புகளும் தடுக்கப்பட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக ஊடகங்கள் நமது காட்டின் மீதும் காட்டுயிர்கள் மீதும் காட்டும் அக்கறை மிகப்பெரியது. பல ஊடக செய்தியாளர்கள் கானகம் காக்கும் செயல்பாட்டாளர்களாகவும் இருப்பது காட்டின் பாதுகாப்பிற்கு பெரும் நம்பிக்கையை தருகிறது.
இன்றும் பல்வேறு அச்சுறுத்தலோடுதான் காடு உள்ளது. தொடர்ந்து செயல்பட வேண்டும். எனினும் முன்பைவிட பாதுகாப்பு மேம்பட்டுள்ளது என்கிற மகிழ்ச்சியை இந்த கானக நாளில் பகிர்ந்து கொள்வோம்.
**கட்டுரையாளர் குறிப்பு**
**ஓசை காளிதாசன்** – சுற்றுச்சூழலியலாளர், கோவை ’ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவராகவும், தமிழ்நாடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக மேற்குத் தொடர்ச்சி மலையின் வனம், வன உயிர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
�,”