மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி பற்றிய அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் ஹலோ என்ற ஒரே ஒரு தெலுங்கு திரைப்படம் மட்டுமே வெளிவந்துள்ளது. ஆனால் தற்போது அவர் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
திரையுலகில் வாரிசுகளுக்கு மிக எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது உண்மை என்பது பல நேரங்களில் நிரூபணமாகியுள்ளது. ஆனால் அதை தக்கவைக்க பெரும் உழைப்பும், திறமையும் தேவை. அதை ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்த கல்யாணி நடிகையாக திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே கலை இயக்குநர் பாபு சிரிலிடம் உதவியாளராக கிரிஷ் 3 என்ற இந்தித் திரைப்படத்தில் பணியாற்றினார். விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். திரைப்படம் உருவாவதன் பல்வேறு கட்டங்களில் பணியாற்றிய பின்னரே ஹலோ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் தமிழில் மட்டும் மூன்று படங்கள் பல்வேறு கட்டங்களில் தயாரிப்பில் உள்ளன. அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் வான் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக கல்யாணி நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனை கதாநாயகனாகக் கொண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ திரைப்படத்திலும் கல்யாணி இணைந்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிப்பது என்பது உறுதியாகாமல் இருந்தது. தற்போது இதன் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி கல்யாணி நடிப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கல்யாணியும் தனது ட்விட்டர் பக்கத்தில், “அருமையான திரைக்கதை உள்ள இப்படத்தில் நடிக்க இனியும் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.�,