இந்திய அணியின் பந்து வீச்சாளர் கலீல் அஹமதுவுக்கு ஐசிசி போட்டி விதிகளின்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்துவருகிறது. இதன் ஐந்தாவது ஒருநாள் போட்டி நவம்பர் 1ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் 4ஆவது போட்டியில் தான் நடந்துகொண்ட விதத்துக்காக ஐசிசியால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார் பந்துவீச்சாளர் கலீல் அஹமது.
அதாவது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அஹமது 4ஆவது போட்டியில் ஐந்து ஓவர்கள் பந்து வீசி 13 ரன்களைக் கொடுத்ததுடன் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணி வெற்றிக்கு உதவினார். துடிப்புடன் பந்துவீசிய அவர் ஆட்டத்தின் 14ஆவது ஓவரில் சாமுவேல்ஸை வெளியேற்றியபோது ஆக்ரோஷமாகக் கத்தினார்.
அவரது இந்தச் செயல் ஐசிசி விதிமுறைகளை மீறி நடந்துள்ளதாக ஐசிசியின் தரப்பில் கருதப்பட்டுள்ளது. எனவே ஐசிசியின் 2.5ஆவது விதியின்படி கலீலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு தகுதி நீக்கப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த போட்டிகளில் தனது தவறுகளைத் திருத்தி கவனமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் மீறும்பட்சத்தில் ஏற்கெனவே தகுதி நீக்கப் புள்ளி பெற்றிருப்பதால் பெரிய அளவிலான நடவடிக்கை கலீல் மீது எடுக்கப்பட வாய்ப்புள்ளது.�,