அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலைச் சந்திக்கும்படி ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து ஆளுநரைச் சந்திக்க அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார்.
சொத்து குவிப்பு வழக்கின் காரணமாக சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து அதிமுக கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் அவர் உரிமை கோரினார். ஆனால், அவரை நேற்று வரை கவர்னர் ஆட்சியமைக்க அழைக்காத காரணத்தால், நேற்று இரவு மீண்டும் ஒருமுறை நேரில் சென்று சந்தித்தார்.
அப்போது தன்னிடம் 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் அதனால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். அவரை தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை பெரும்பான்மை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று கோரினார். இதனால், யாரை முதலில் அழைப்பது என்பதில் ஆளுநருக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
அதையடுத்து, ஆளுநர் டெல்லியில் தொடர்பு கொண்டு ஆலோசனை செய்தபோது, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமியை அழைக்கும்படி அங்கிருந்து கிரின் சிக்னல் வந்தது. இதனால், ஆளுநருக்கு ஏற்பட்ட குழப்பம் நீங்கி அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மெஜாரிட்டி இல்லாதநிலையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்துள்ள ஆளுநர், எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுத்துள்ளாரா என்பது அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்புக்குப் பின்னரே தெரியவரும்.
ஆளுநர் அழைப்பின்பேரில், இன்று மூன்றாவது முறையாக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகிய முக்கிய அமைச்சர்களுடன் சென்று ஆளுநரை சந்திக்கச் செல்கிறார். அதையொட்டி அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூர் விடுதியில் இருந்து ஆளுநரைச் சந்திக்கப் புறப்பட்டார்.�,