20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 34ஆவது நினைவுநாள் மற்றும் சர்தார் வல்லபபாய் படேலில் 143ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், குமரி அனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சமதர்ம சமத்துவ சமுதாயம் படைப்போம் என்று உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், “தகுதி நீக்கம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பது சம்பந்தப்பட்ட 18 பேர் மற்றும் அக்கட்சித் தலைவர் முடிவு செய்ய வேண்டிய விஷயம். பொறுத்திருந்து பார்ப்போம், 2 தொகுதிக்கு தேர்தல் வந்தாலும், 20 தொகுதிகளுக்கு தேர்தல் வந்தாலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும். 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்போது அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டார்.
மேலும், “பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது வழக்கம். முதலில் தேர்தல் அறிவிக்கப்படட்டும். திமுக தலைவர் ஸ்டாலினோடு கலந்துபேசி இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ள 18 தொகுதிகளில் சோளிங்கரில் மட்டும் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஏ.எம். முனிரத்தினம் 67453 வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் என்.ஜி.பார்த்திபன் 77411 வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார்.
பொதுத் தேர்தலில் போட்டியிட்டவரே இடைத்தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளது சோளிங்கர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுவிட வேண்டும் என்பதை மனதில் வைத்துதான் என கருதப்படுகிறது.
20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.�,