nஇடைத்தேர்தல்கள்: காங்கிரஸ் வெற்றி முகம்!

public

அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மக்களவை தொகுதி, கேரளாவில் நடைபெற்ற வெங்காரா சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிமுகம் காட்டியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மக்களவை தொகுதியில் 2014 தேர்தலில் பாஜக சார்பில் நடிகர் வினோத் கன்னா போட்டியிட்டு வென்றார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததை ஒட்டி இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 11-ல் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் ஜாகர் போட்டியிட்டார். பாஜக சார்பில் ஸ்வரன் சலாரியார் போட்டியிட்டார். இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் முன்னிலை பெற்றுக் கொண்டிருந்தது.

காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாகர் தனக்கு எதிராகப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட மதியம் 12 மணி நிலவரப்படி 1 லட்சத்து 60 ஆயிரத்து வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் இருக்கிறார். கடந்த 1998,1999, 2004 தேர்தல்களில் தொடர்ந்து இந்தத் தொகுதியை பாஜக சார்பாக வென்றார் வினோத் கன்னா. 2009-ல் காங்கிரஸ் கைப்பற்றியது. மீண்டும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வினோத் கன்னா பாஜக சார்பில் வென்று இதை பாஜகவின் கோட்டையாக்கினார்.

இந்த நிலையில்தான், இப்போது நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் இத்தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறது. இதனால் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. பஞ்சாப் மாநில அமைச்சராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரான, நவ்ஜோத் சிங் சித்து, ‘எங்கள் கட்சியின் தலைவராக ஆக இருக்கும் ராகுல் காந்திக்கு நாங்கள் அளிக்கும் தீபாவளிப் பரிசு இது. மக்கள் பாஜக அகாலி தள் கூட்டணிக்கு மிகச் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள்’’ என்றார்.

இதேபோல கேரள மாநிலம் வெங்காரா சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் ஆளும் இடதுசாரியைக் கூட்டணியை இரண்டாவது இடத்துக்குத் தள்ளி காங்கிரஸ் கூட்டணி முஸ்லிம் லீக் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் வெங்காரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குன்ஹாலி குட்டி, மலப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலிலும் வெற்றிபெற்றதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் இத்தொகுதிக்கு அக்டோபர் 11-ல் இடைத்தேர்தல் நடந்தது.

இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில்… காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதர் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார்.

இடதுசாரி முன்னணி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பஷீர் இரண்டாமிடத்தில் இருந்து வந்தார். இறுதி முடிவில் முஸ்லிம் லீக்கின் காதர் 65,227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இடதுசாரி கூட்டணி வேட்பாளர் 41,917 வாக்குகாள் பெற்று இரண்டாமிடமும், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் 8648 வாக்குகள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.

அண்மையில் பாஜக தலைவர் அமித் ஷா கேரளாவுக்கு விசிட் அடித்து மக்கள் பாதுகாப்பு யாத்திரை எல்லாம் நடத்தினார், முன்னதாக மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அல்போன்ஸ் என்ற கேரளத்தைச் சேர்ந்தவருக்கு இடம் கொடுத்தது பாஜக.

ஆனாலும் இந்த இடைத்தேதலில் பாஜக வேட்பாளர் 5728 வாக்குகள் பெற்று நான்காமிடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இமாசலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்திருப்பது குறிப்பிடத் தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *