இரா.பி.சுமி கிருஷ்ணா
*( ராப் இசைக் கலைஞர் அறிவுடன் ஒரு நேர்காணல்)*
இசை மகிழ்ச்சிக்கானது மட்டுமன்று; ஏமாற்றத்தின் இயலாமையை, கோபத்தின் வலியை, காதலின் இனிமையை எல்லாம் கண்முன்னே காட்சிப்படுத்திடும் வல்லமை இசைக்கு உள்ளது. இரண்டரை மணி நேரத் திரைப்படம் பேசிடும் கதையை அதே வீரியத்தில் ஐந்து நிமிடப் பாடல் ஒன்றின் வழியாகக் கூறிவிட முடியும். அந்த இசையை ஆயுதமாக்கி, அரசியல் பேசித் தெருவில் இறங்கிக் குரல் கொடுக்கிறார்கள், நாங்கள் சாதியற்றவர்கள் என்று உரக்கக் கூறும் ‘கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்ஸ்’ குழுவினர்.
தமிழில் நாம் இதுவரை பார்த்த, நமக்குப் பழக்கப்பட்ட ஹிப் ஹாப் ஆல்பங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் உருவாகியிருக்கிறது அவர்களின் தெருக்குரல் ஆல்பம். பெயருக்கேற்றவாறே தெருவிலிருந்து கடைக்கோடி வரை உள்ள மனிதர்களின் மகிழ்ச்சி, காதல், ஏமாற்றம், வலி, கோபம் என்று அத்தனை உணர்ச்சிகளையும் அறிவு, ஆஃப்ரோ ஆகிய இருவரும் தங்கள் பாடல்கள் மூலமாகத் தந்திருக்கிறார்கள்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் ‘கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்ஸ்’ வெளியிட்டுள்ள தெருக்குரல் ஆல்பத்தில் ‘ஆன்ட்டி இண்டியன்’, ‘மிடில் கிளாஸ்’, ‘ஓகே சார்’, ‘கள்ள மௌனி’, ‘ஸ்னோலின்’, ‘தமிழச்சி’ என ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறுபட்ட தளத்திலிருந்து சமூக அரசியலைப் பேசுகிறது.
*“என்னா? நான் உனக்கு ஆன்ட்டி இண்டியன்னா*
*என்னா? ஓட்டு போட்டா பச்சை தமிழன்னா”*
என்ற வரிகளுடன் தேர்தலை ஒட்டி வெளியாகியிருந்த ‘ஆன்ட்டி இந்தியன்’ பாடல் கேலியும் கிண்டலுமாய், சமகால அரசியல் கருத்துகளை அழுத்தமாகக் கலாய்த்துச் செல்வதோடு சிந்திக்கவும் வைத்துள்ளது.
* “ஒழச்சு கிழிச்ச சாரு, சாரு எந்த ஊரு?*
*ரோட்ல நிக்கிறேன் பாரு!”*
என்று தொடங்கும் ‘ஓகே சார்’ பாடல், அரசியலைப் பேசுவதோடு பாடலாசிரியர் அறிவின் வாழ்க்கையோடு சம கால இளைஞர்களின் வாழ்க்கையையும் பேசுகிறது.
*அரியர் மொத்தம் ஏழு, அறிவு இவரு பேரு*
*கவித எழுதும் ஆளு, படிச்சு என்னத்த கிழிச்சு கிழிச்சு* என்ற வரிகளைப் பாடி தோல்வியில் துவள வேண்டாம் என்ற சிறு பாடத்தையும் உணர்த்துகிறார்.
*இருக்கு பர்ஸ்ல கொஞ்சம், மறைப்போம் வீட்டுல பஞ்சம்!*
*விடிஞ்சா வேலைக்குப் போணும், குடிச்சேன் வேலட்டே காணோம்!*
*இருப்பது மூணு ஜீன்ஸ், மனசுல ஸெலினா கோம்ஸ்!*
*சொந்தக்காரன் பாத்தா, பொண்ணு தர மாட்டான்*
என்ற வரிகளுடன் அமைந்த ‘மிடில் கிளாஸ்’ பாடல் இல்லாமையிலும் கொண்டாட்டம் காணும் நடுத்தர மக்கள் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்திச் செல்கிறது.
காரசாரமான பிரியாணி விருந்துக்கு இடையே தித்திக்கும் இனிப்பைப் தந்தது போன்று காதலைப் பாடும் **தமிழச்சி** பாடல் தனிக்கவனம் பெறுகிறது.
*“ரைட்டோ தப்போ நீ புடிச்சத செய்யடி கிளப்போ மப்போ*
*பார்ட் டைம் வொர்க்கோ, நீ பகலில தூங்குற ஐடி கிளெர்க்கோ*
*நீயா நீ நிம்மதியா இரு! நீங்காதே உனை நீ எப்போதும்*
*நான் நானா நல்லவளா என யோசிக்காதே, அதுவே போதும்”*
பெண்மையின் மென்மையைப் போற்றும் இந்தச் சமூகத்தில், பெண்ணின் திமிரால் கவரப்பட்டு, அவள் விரும்புவதைச் செய்து, அவளை அவளாக இருக்கக் கூறும் ஒரு காதலனின் அன்புப் பாடல் பலரது ரிங்டோனாகவும் மாறிவிட்டது.
*(ஆஃப்ரோ, அறிவு)*
பேச வேண்டிய இடத்தில் பேசத் தெரிந்திருந்தும், பேச முடிந்தும் பேசாமல் போலியான மௌனத்துடன் ‘இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட்டுப் போக’ நினைக்கும் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒரு குற்ற உணர்ச்சியை விதைத்துப் போகிறது ‘கள்ள மௌனி’ பாடல்.
*“பெட்ரோல் விலை ஏறிப்போனால் என்ன தோழர்*
*கட்டும் வரி கூடிப்போனால் என்ன தோழர்*
*முட்டாள் ஒரு மன்னனானா என்ன தோழர்”*
என்ற வரிகளைக் கேட்கும்போது மனதுக்குள் ஏற்படுகிற ஏமாற்றத்துடன் கூடிய கோபம்தான் ‘அறிவு’ என்கிற பாடலாசிரியருக்குக் கிடைத்துள்ள வெற்றி.
*“நான் ஸ்னோலின் பேசுறேன் உன் காதில் விழுதா?*
*என் தங்கை ஆசிபா என் கூடத்தான் இருக்கா?*
*ஒரு வேளை நான் பொண்ணா பொறக்காம *
*ஒரு மாடா பொறந்திருந்தா *
*இந்த நாடே எனக்காக அழுதிருக்கும் இல்லே!*
என்று சாதியற்றவர்களின் ஒருங்கிணைப்பிலிருந்து ஒட்டுமொத்த மக்களின் குரலை வலியின் இசையோடு கோபம் ததும்பும் வரிகள் எழுதிப் பாடியிருக்கிறார் அறிவு. சாதியின், மதத்தின் பெயரைக் கூறி தினம் ஒரு கொடூரக் கொலையை வலியுடன் கடந்து செல்லும் நமக்கு, உரிமைக்காகக் குரல் கொடுத்த ஸ்னோலினின் தொண்டைக் குழியை அடைக்கச் செய்த துப்பாக்கிக் குண்டையும், கடவுளின் கண்முன்னே கதறக் கதறக் கசக்கி எறியப்பட்ட ஆசிபாவையும் நினைவூட்டிச் செல்கிறார்.
இவ்வாறு வலியுடனும், ஏமாற்றத்துடனும் நமது நாட்டில் நாம் சந்தித்த முக்கிய பிரச்சினைகளை எல்லாம் பகடி செய்து சிந்திக்கவும் வைத்துள்ள ஹிப் ஹாப் ஆல்பம் குறித்து அறியும் விதத்தில் ‘கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்ஸ்’ குழுவைச் சேர்ந்த அறிவுடன் மின்னம்பலம் சார்பாக உரையாடினோம்.
*(அறிவு)*
அறிவின் சொந்த ஊர் அரக்கோணம். பொறியியல் மற்றும் எம்.பி.ஏ படித்துள்ள இவர் பாடல்கள் குறித்தோ, இசை குறித்தோ எந்த ஒரு பின்புலமும் இல்லாத, தொலைக்காட்சியும் சினிமாவும் பார்த்து வளராத ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். தான் கேட்டு வளர்ந்த நாட்டுப்புறப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்களின் வழியாகவும் தமிழின் மீது கொண்ட ஆர்வத்தாலும், இன்று சமூகப் பிரச்சினைகளைப் பேசும் ஒரு சுயாதீனக் கலைஞனாகத் தனித்துவத்துடன் வளர்ந்து நிற்கிறார். காலா, வடசென்னை உள்ளிட்ட பதினைந்து படங்களுக்கும் மேல் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார்.
** கள்ள மௌனி ஆல்பம் குறித்த ஒரு சிறு அறிமுகத்தைத் தர முடியுமா?**
இந்த ஆல்பத்தை நானும் (அறிவும்) ஆஃப்ரோ என்பவரும் இணைந்து உருவாக்கியிருக்கிறோம். இதுதான் தமிழின் முதல் அரசியல் ஹிப் ஹாப் ஆல்பம். கடந்த பத்து வருடங்களாகத் தமிழில் ஹிப் ஹாப் ஆல்பங்களே வரவில்லை. மொத்தம் ஆறு பாடல்கள். அரசியல், சமூகப் பிரச்சனைகளை ராப் வடிவில் சொல்லும்படி இது அமைக்கப்பட்டுள்ளது. ‘தமிழச்சி’ பாடல் மட்டும் காதலைப் பற்றிக் கூறினாலும் அது காதலையும் தாண்டிப் பெண்ணியத்தை அதிகமாகப் பேசும். இது ஒரு முழு அரசியல் ராப் ஆல்பம்.
**‘தெருக்குரல்’ என்ற பெயருக்கான காரணம் என்ன?**
கலை மக்களுக்கானது. அதை மக்களிடமே கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இந்த ஆல்பம் உருவாகுவதற்கு முன்பாகவே பார்க், பீச் என மக்கள் கூடும் பொதுவெளிகளில் மக்களுக்கான பாடல்களைப் பாடுவோம். தெருவில் நின்று நாங்கள் மக்கள் பிரச்சினையைப் பாடுவதால் தெருக்குரல் என்ற பெயர் வைத்தோம். அதையே இந்த ஆல்பத்துக்கும் வைத்துள்ளோம்.
**இந்த ஆல்பத்துக்கு முன்னதான உங்கள் பயணம் எவ்வாறு அமைந்தது?**
தெருக்குரல் ஆல்பத்துக்கு முன்னதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் ‘கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்ஸ்’ வெளியிட்ட ‘மகிழ்ச்சி’ ஆல்பத்தில் நான்கு பாடல்களை எழுதியுள்ளேன், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தோடு ‘கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்ஸ்’ இயங்கி வருகிறது. காலா, வட சென்னை, ஜிப்ஸி, நட்பே துணை உள்ளிட்ட 18 படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றியுள்ளேன்.
**இயக்குநர் பா.ரஞ்சித் இந்த ஆல்பத்தை வெளியிட்டதன் அடிப்படைக் காரணம் என்ன?**
இயக்குநர் பா.ரஞ்சித்தின் முன்னெடுப்பான ‘கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்ஸ்’ குழுவில் நானும் ஓர் அங்கமாக இருந்தேன். அந்த அறிமுகத்தின் அடிப்படையில் இந்த ஆல்பத்தைக் குறித்து அவரிடம் கூறும்போது, தானே இதையும் தயாரித்து வெளியிடுவதாக இயக்குநர் பா.ரஞ்சித் கூறினார். அவர் சுயாதீன கலைஞர்களை ஊக்குவிப்பதில் மிகுந்த முனைப்புடன் உள்ளார். அந்த அடிப்படையில்தான் இந்த ஆல்பத்தையும்அவர் வெளியிட்டுள்ளார்.
**அரசியலைப் பாடுபொருள் ஆக்கியதன் காரணம் என்ன?**
ஹிப் ஹாப் என்பதே வாழ்வியல் சார்ந்த ஒரு விஷயம். மக்கள் பிரச்சினைகளை எடுத்துப் பேச விருப்பமுள்ள கலைஞர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இதனாலேயே இத்தகைய முயற்சியை எடுத்துள்ளோம். அதைவிட முக்கியமானது எங்களுடைய படைப்புகள் எதுவாக இருந்தாலும் அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில்தான் எனது முதல் ஆல்பத்திலேயே அரசியலையும் சமூகத்தையும் பாடுபொருளாக எடுத்துக்கொண்டேன்.
**தெருக்குரல் ஆல்பத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றிய பிற கலைஞர்கள் குறித்து?**
இந்த ஆல்பத்தில் நானும் ஆஃப்ரோவும் பாடல்களைப் பாடியுள்ளோம். தென்மா ஒரு பாடலைப் பாடியுள்ளார். காலா, கபாலி போன்ற திரைப்படங்களில் பாடியுள்ள மலேசியாவைச் சேர்ந்த ராப் இசைக்கலைஞரான ரோஷன் கேம்ப்ராக்கும் ஒரு பாடலில் பங்காற்றியுள்ளார். பாடலுக்கான விஷுவல்களை கென் ராய்சன் அமைத்து இயக்கியுள்ளார்.
*(இயக்குநர் கென் ராய்சன்)*
**கென் ராய்சனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து கூறுங்கள்**
தமிழில் திரைப்படப் பாடல்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு சுயாதீனக் கலைஞர்களின் ஆல்பங்களுக்குக் கிடைப்பதில்லை. அதைக் கருத்தில்கொண்டு வெகுஜன ரசிகர்களை சுயாதீனக் கலைஞர்கள் பக்கம் திருப்பும் வகையில் சிறந்த தரத்தில் கென் ராய்சன் காட்சிகளை அமைத்துக் கொடுத்துள்ளார். முக்கியமாக கலைஞர்களுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்திலான காட்சிகளை அமைப்பதில் கென் தேர்ந்தவர். அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள கிளம்புடா, அக்டோபர் மாதம், சைக்கோ மந்திராவின் பல ஆல்பங்கள், லேடி காஷின் ஆல்பங்கள் அனைத்தும் முக்கியமான ஆல்பங்கள். அதைப்பார்த்து பிரமித்துள்ளேன். அதனால் அவருடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்தேன். அவரது காட்சியமைப்பு ஆல்பத்துக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.
**தமிழில் இதற்கு முன்பாக வெளிவந்த சில ஹிப் ஹாப் பாடல்கள் பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். அதிலிருந்து தமிழச்சி பாடல் எவ்வாறு வேறுபடுகிறது?**
‘தமிழச்சி’ நமது சமூகத்துக்கு நிச்சயம் ஒரு புதுமையான பாடலாக அமையும். பெண்களின் திமிரை ஓர் ஆண் கொண்டாடும் தன்மை இன்றும் நமது சமூகத்தில் அரிதான ஒன்றாகவே உள்ளது. பெண்களைப் புனிதமானவர்களாக அறிவித்து, அவர்கள் மீதே வன்முறைகளில் ஈடுபடுவதும் அவர்களை வன்புணர்வு செய்வதுமாகத்தான் இன்றும் உள்ளது. பெண்ணை சக மனுஷியாக எண்ணும் குரலில் தமிழச்சி பாடல் அமையும்.
பெண்ணின் திமிரு அழகு. நான் விரும்பும் பெண்ணை அவளது விருப்பம் போல் அவளை வாழ விடுவதுதான் எனது காதல் எனும் விதத்தில் தமிழச்சி பாடல் அமைந்திருக்கும். ‘ஆண்கள் மது அருந்துவது இயல்பு என்றும் பெண்கள் குடித்தால் அது கலாச்சார சீர்கேடு’ என்றும் கூறும் போலித்தனங்களை உடைக்க வேண்டும். ஆணோ பெண்ணோ, சக மனிதர்களை மனிதர்களாகப் பார்ப்பதுதான் நமது நோக்கம். அப்படி இருக்கும்போது கலாச்சாரம் என்னும் பெயரில் பெண்களையும் சிறுபான்மையினரையும் ஒதுக்கி வைத்து, அவர்களது ஆசைகளையும் கனவுகளையும் சிதைத்துவிட்டு அவர்களை மட்டும் அங்கீகரிக்கும் வலி நிறைந்த வன்முறையை உடைத்து இயற்கையின் விதியை இந்தப் பாடலில் பதிவு செய்துள்ளோம்.
**ராப் இசையை நோக்கி உங்கள் கவனம் திரும்பியது எப்போது ?**
நான் கேட்டு வளர்ந்த ஒப்பாரிப் பாடல்களும், நாட்டுப்புறப் பாடல்களும்தான் எனது ஆல்பத்துக்கு அடிப்படை என்று கூறலாம். என்னைக் கேட்டால் நான் அறிந்த மிகச் சிறந்த ராப் பாடகர் எனது பாட்டிதான். அவர் ஒப்பாரியாகப் பாடிய பாடல்களின், அவர் கூறிய கதைகளின் தாக்கம்தான் இந்த ஆல்பத்தின் அடிப்படை. மண் சார்ந்த அரசியலைப் பேசுவதற்கு மிகச் சிறந்த மூலமாக அமைந்தது ஒப்பாரிப் பாடல்கள் என்று கூறலாம். ஸ்னோலின் பாடல்கூட ஒப்பாரியின் ஹிப் ஹாப் வடிவம்தான். சாமானியனின், உழைக்கும் மனிதனின் நாட்டுப்புறப் பாடலைப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அதன் தன்மையை மாற்றி சினிமாவில் வியாபாரமாக்கி வருவது வேதனையளிக்கிறது.
[கள்ள மௌனி வீடியோ](https://www.youtube.com/watch?v=aKanKNT8R38)
[தெருக்குரல் ஆல்பம்](https://www.youtube.com/watch?v=1GfMYuvkOug&list=OLAK5uy_nWRilx8F_M-hs7NUazQnDOztpI-doUHgY)
**
மேலும் படிக்க
**
**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**
**[ராஜ்யசபா தேர்தல் நடக்காது!](https://minnambalam.com/k/2019/07/10/51)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/10/80)**
**[பதவி விலகத் தயார்: அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/10/54)**
**[இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!](https://minnambalam.com/k/2019/07/09/22)**
�,”