இயற்கையின் படைப்பில் பிரம்மாண்டமானது யானைகள். காட்டில் வாழும் உயிரிகள் பலவற்றை விடவும் கூட்டமாக வாழும் இயல்புடையவை. நமது தெருக்களிலும், கோவில்களிலும் காணப்பெறக்கூடிய யானைகளை விடவும் பெரியவை ஆப்பிரிக்க யானைகள். அவற்றின் தந்தங்களும், தும்பிக்கையும் இயற்கையின் கொடைகள். அவற்றை தந்தத்திற்காக வேடையாடுபவர்களைப் பற்றியும், அந்த யானைகளைக் காப்பாற்றப் போராடும் சூழலியாளர்களைப் பற்றியும் ஒருசேர பதிவு செய்கிறது த ஐவோரி கேம் ஆவணப்படம்.
ஆப்பிரிக்காவின் காடுகளில் பயணிக்கும் கேமரா அவற்றின் இயற்கை சூழலை அழகாய் படம் பிடிக்கிறது. அங்கு இயல்பாய் வாழும் யானைகளை எப்படி வேட்டையாடுகிறார்கள்? அதற்கு பின்னால் இருக்கும் கூட்டம், அவர்களுக்கான தேவை என்ன? என நீள்கிறது இந்த ஆவணப்படம். ஆரம்பத்தில் யானைகளின் எண்ணிக்கையைச் சொல்லியே ஆரம்பிக்கிறார்கள். இப்படியே தந்தத்திற்காக யானைகளை வேடையாடினால், நமது வாழ்நாளுக்குள்ளாகவே யனைகளை இழந்து விடுவோம். அதாவது, யானை என்ற இனமே அழிந்து விடும் என்ற புள்ளிவிவரத்தையும் சொல்கிறது.
வேட்டையாடப்படும் யானைகளின் தந்தம் யாருக்காக தேவைப்படுகிறது? அவற்றுக்கான சந்தை எங்குள்ளது? என்பதைப் பதிவு செய்திருப்பது உண்மையை உரக்கச் சொல்லும் தைரியத்தைக் குறிக்கிறது. ஆப்பிரிக்காவின் தான்சானியா, ஸாம்பியா மற்றும் கென்யா-வின் காடுகளில் பயணிக்கும் கேமரா தீடிரென சீனாவின் நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்கிறது. சீனாவில் ஆண்டுக்கு 5 டன் தந்தத்தினை சட்டப்படி இறக்குமதி செய்துகொள்ளலாம் என அதிரவைக்கும் தகவலைத் தெரிவிக்கின்றனர். இந்த சட்டமே தந்தங்களை கடத்துவதற்கு எளிதான வழிகளை அமைத்துக் கொடுக்கிறதல்லவா? சீனாவின் கறுப்புச் சந்தையில் ஆண்டுக்கு நூற்றுக்கனக்கான டன் தந்தங்கள் கடத்தப்படுகின்றன என்ற உண்மையை சொல்கின்றனவல்லவா?
ஆவணப்படத்தினை கிஃப் டேவிட்சன் (Kief Davidson),ரிச்சர்ட் லட்கனி (Richard Ladkani) என இருவர் இயக்கியுள்ளனர். இவர்களில் ரிச்சர்ட் லட்கனி ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர். சூழலியல் செயல்பாட்டாளர்களையும், சூழலையும் சாதாரண கேமராவில் காட்சிபடுத்திய ரிச்சர்ட், கருப்பு சந்தையினை ரகசிய கேமராக்கள் மூலம் பதிவு செய்கிறார். யானைகளை வேடையாடுவதில் அப்பகுதி விவசாயிகளும் உதவியாய் இருக்கும் காரணத்தையும், உள்முரணையும் பதிவு செய்திருப்பது சிறப்பு. படத்திற்கு ஹாலிவுட் நடிகர் லியார்டனோ டிகாப்ரியோ நிர்வாக தயாரிப்பாளராக இணைந்தது இன்னும் சிறப்பு.
டொரண்டோ திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படம் ஆஸ்காருக்கான ஆவணப்பட போட்டியில் 15 ஆவணப்படங்களுடன் முண்ணனியில் உள்ளது.
-சா.ஜெ.முகில் தங்கம்�,