வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு ஆதார் – பான் இணைப்பு கட்டாயம் எனவும், இதற்கான பணிகள் வருகிற மார்ச் மாத நிறைவுக்குள் முடிக்கப்படும் எனவும் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆதாரின் சட்டம் சார்ந்த வரம்புகள் 2018 செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல, நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் 1961 வருமான வரிச் சட்டம் பிரிவு 139ஏஏ-இன் படி, ஆதார் – பான் இணைப்பு கட்டாயமாகும். இதற்கான பணிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வோர் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது அவசியம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிப்ரவரி 6ஆம் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில் ஆதார் – பான் இணைப்பை வருமான வரி ரிட்டன் தாக்கலுக்குக் கட்டாயமாக்கியிருந்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதை எதிர்த்து இரண்டு நபர்கள் தங்களது 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கலில் ஆதார் – பான் இணைப்பைக் கட்டாயமாக்குவதை எதிர்த்து மத்திய அரசு வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏ.கே.சிக்ரி மற்றும் எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அமர்வு, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் இதில் தீர்ப்பளித்துள்ளதாகக் கூறியுள்ளது.
இதுவரையில் மொத்தம் 42 கோடிப் பேருக்கு பான் எண்களை வருமான வரித்துறை வழங்கியுள்ளது. அதில் 23 கோடி பான் எண்கள் மட்டுமே சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.�,