அரசுடன் ஒத்துழைக்காத சமூக வலைத்தளங்களை ஏன் தடை செய்ய முடியவில்லை என மத்திய அரசிடம் நேற்று (அக்.31) சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பான பொது நலவழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. அந்தோணி கிளேமெண்ட் ரூபின் என்பவர் தொடர்ந்த வழக்கில்,மின்னஞ்சல்,முகநூல் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களுக்கு ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசுக்கு உத்திரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் மனுவில், சமூக வலைத்தளங்கள் மூலமாக ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக துன்புறுத்திய ஒருவர் போலீசாரால் கண்டுபிடிக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களை ஆதார் அட்டையுடன் இணைத்திருந்தால் அவரை எளிமையாகக் கண்டுபிடித்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இம்மனுவைப் பரிசீலித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியபுரம் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு சமூக வலைத்தளங்களை இணைக்கும் கோரிக்கையை நிராகரித்ததுடன் சமூக வலைத்தளங்களின் உரிமையாளர்கள் போலீசாருடன் ஏன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில்லை என கேள்வி எழுப்பினர். அப்போது அரசின் வழக்கறிஞர் வி.வெங்கடேசன் கூறுகையில், பல சமூக வலைத்தளக் கம்பெனிகளில் குறை தீர்ப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை, இது தகவல் தொழில் நுட்ப விதிகள்-2011ன் படி கட்டாயமானதாகும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் அரசு ஏன் அந்த கம்பெனிகளை அனுமதிக்கிறது? என்று கேள்வி எழுப்பினா். பின்னர்,முகநூலின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சத்தீஷ் பராசரன், கம்பெனிக்கு அந்தரங்கமான விசயங்களை பகிர்வது குறித்து தெளிவான கொள்கை ஒன்று உள்ளது. அந்த கொள்கையையும், விரிவான அறிக்கையையும் நீதிமன்றத்திற்கு சமர்பிப்பதாக கூறினார். பின்னர் தொடர்ந்து வாதங்கள் நடைபெற்றன.
முன்னதாக, இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் வக்காலத்து ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்த வக்காலத்தில், சைபர் கிரைம் போலீசாரால் பன்னாட்டு சமூக வலைத்தளக் கம்பெனிகளிடமிருந்து தகவலைப் பெறுவதில் சிரமம் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.�,