இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அனுப்பிய காப்புரிமை நோட்டீஸால் அவருக்கு 32 ரூபாய் கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரும், கவிஞருமான குமார் விஷ்வாஸ் என்பவர் காலம் சென்ற இந்தி கவிஞர்களை போற்றும் வகையில் அவர்கள் எழுதிய சில கவிதைகளைத் தொகுத்து வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில் நடிகர் அமிதாப் பச்சனின் தந்தை ஹரிவன்ஸ் ராய் பச்சன் எழுதிய ஒரு கவிதையும் இடம்பெற்று இருந்தது. இதனை அறிந்த அமிதாப்பச்சன், தனது தந்தை எழுதிய கவிதையை பயன்படுத்தி காப்புரிமையை மீறி விட்டதாக கவிஞர் குமார் விஷ்வாஸுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அத்தோடு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ இது காப்புரிமை மீறிய செயல். இதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமிதாப் அனுப்பிய அந்த நோட்டீஸை பெற்றுக்கொண்ட குமார் அந்தக் கவிதையை யூ டியூப்பில் இருந்து நீக்கினார். அமிதாப்பச்சனின் தந்தை எழுதிய கவிதை அடங்கிய அந்த வீடியோவுக்கு கிடைக்கும் வருமானத்தை கொடுத்து விடுவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி அந்த வீடியோவுக்கு கிடைத்த 32 ரூபாயை அமிதாப்பச்சனுக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குமார் விஷ்வாஸ் ‘கவிஞர்களின் குடும்பத்தினரிடமிருந்து தனக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. ஆனால், உங்களிடம் இருந்து நோட்டீஸ்தான் கிடைத்தது அமிதாப்சார். அந்த வீடியோவை அழித்து விட்டேன். அதற்கு கிடைத்த வருமானம் 32 ரூபாயையும் தங்களுக்கு அனுப்பி வைத்து இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.�,