மயிலாப்பூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: பொதுமக்கள் போராட்டம்!

Published On:

| By admin

சென்னையில் ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை கிரீன்வேஸ் சாலை கூவம் ஆற்றின் கரையோரமாக ஏராளமானவர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். இந்த ஆற்றின் ஒரு பகுதியில் இருந்த வீடுகள் கடந்த ஆண்டு அகற்றப்பட்டன. மயிலாப்பூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள 259 வீடுகள் அகற்றப்படாமல் இருந்தது. இந்த வீடுகளில் சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த வீடுகளை அகற்ற உத்தரவிட கோரி கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவுப்படி அந்த வீடுகளை அகற்றுவதற்காக இன்று காலையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் ஜே.சி.பி. இயந்திரங்கள் உடன் சென்றனர். சுமார் இருபது வீடுகளை மின்னல் வேகத்தில் இடித்தனர். அதை பார்த்ததும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டு வீடுகளை இடிக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் தலையில் அடித்து ஒப்பாரி வைத்தனர். ஜே.சி.பி. எந்திரத்தை நகர விடாமல் ரோட்டில் அமர்ந்திருந்தனர். இதனால் அதிகாரிகளால் வீடுகளை இடிக்க முடியவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாரும் அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் சொல்ல முயன்று வருகின்றனர். இப்படி திடீரென்று வீடுகளை இடித்து எங்களை நடுத்தெருவிற்கு போக சொன்னால் நாங்கள் எங்கே தங்குவது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share