விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (பிப்ரவரி 6) கோலாகலமாக நடக்கிறது. இந்த கும்பாபிஷேகத்துக்கு ஒரு லட்சம் ரூபாயை முஸ்லிம்கள் வழங்கியுள்ளது பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
விருத்தாசலத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரசித்திப் பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகள் கழித்து இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
திருப்பணிக் கமிட்டி குழு தலைவர் ஜெயின் ஜுவல்லரி அகர்சந்த் தலைமையிலான குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது மகா கும்பாபிஷேகப் பணிகள் தீவிரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த கும்பாபிஷேகத்துக்காக விருத்தாசலம் நவாப் பள்ளிவாசல் முத்தவல்லி முகமது முஸ்தபா தலைமையில் பொருளாளர் சோழன் சம்சுதீன், ஜங்ஷன் ரோடு முஸ்லிம் வியாபாரிகள் சார்பில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கும்பாபிஷேக கமிட்டி குழு தலைவர் அகர்சந்திடம் வழங்கினர்.
சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு நிதி வழங்கிய முஸ்லிம் வியாபாரிகளைப் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கொரோனோ தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று நடக்கும் கும்பாபிஷேகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தலைமையில், டிஐஜிக்கள் பாண்டியன், பிரவீன்குமார் அபினவ், எஸ்பிக்கள் சக்தி கணேசன், ராஜன், 2 ஏஎஸ்பி, 9 டிஎஸ்பி, 34 இன்ஸ்பெக்டர்கள், 78 சப் இன்ஸ்பெக்டர்கள், 77 சிறப்பு இன்ஸ்பெக்டர்கள், 681 போலீஸார், 150 ஆயுதப்படை போலீசார்கள், 70 டிஎஸ்பி, காவலர்கள், 350 ஊர்க்காவல் படை போலீஸார் என 1,386 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
**-ராஜ்**
.