pகிச்சன் கீர்த்தனா: முருங்கையிலை பாட்டீஸ்

Published On:

| By Balaji

முருங்கைக்காயை வைத்து நாம் பொதுவாகச் செய்வது சாம்பார், அவியல், பொரியல், குழம்பு… முருங்கைக்கீரை என்றால், சூப், பொரியல், அடை என்று செய்வோம். வங்கதேசத்தில் முருங்கைக்காயைக்கொண்டு கட்லெட் தயாரிக்கிறார்கள். அந்த வகையில் முருங்கையிலை பாட்டீஸ் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்; ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

**என்ன தேவை?**

முருங்கையிலை – 2 கப்

வெங்காயம் (மீடியம் சைஸ்) – 2 (பொடியாக நறுக்கவும்)

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுது – 2 டேபிள்ஸ்பூன் (4 பூண்டு பல் சேர்த்தது)

புளி விழுது (புளியைக் கெட்டியாக கரைத்து எடுத்தது) – ஒரு டேபிள்ஸ்பூன்

கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்

அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

**எப்படிச் செய்வது?**

முருங்கையிலைகளைக் கழுவி சுத்தம் செய்யவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அதனுடன் முருங்கையிலையையும் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருள்கள் அனைத்தையும் (அரிசி மாவு, எண்ணெய் நீங்கலாக) சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டி கட்லெட் வடிவில் தட்டிக்கொள்ளவும். இதுதான் பாட்டீஸ். தவாவைச் சூடாக்கி சிறிதளவு எண்ணெய்விட்டு, அடுப்பை மிதமான தீயில்வைத்து, செய்துவைத்த பாட்டீஸை அரிசி மாவில் புரட்டிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும். புதினா – கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும். இதை தால் ரைஸுடன் சைடிஷாகவும் பரிமாறலாம்.

**[நேற்றைய ரெசிப்பி: முருங்கையிலை அடை](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/04/28/1/murungailai-adai)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share