முதுமலை: தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் பணி தொடக்கம்!

Published On:

| By Balaji

முதுமலையில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் பணி தொடங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பருவமழையால் கடந்த சில மாதங்களாக பாண்டியாறு, மாயாறு உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் அனைத்து தடுப்பு அணைகள் நிரம்பி காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி முறையாக கிடைத்தது. இதேபோன்று காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவனமும், குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கி கூடலூர், முதுமலை வனப்பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுகிறது. மேலும் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மேலும் காட்டு யானைகள் இடம்பெயர்ந்து ஊருக்குள் அதிக அளவில் வரும் அபாயமும் உள்ளது.

இதைத்தொடர்ந்து நீலகிரி வனப் பாதுகாவலர் மற்றும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் முதற்கட்டமாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு சரக வனப்பகுதியில் சர்க்கிள், கே.எம்.ஆர். சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தரைத்தள சிமென்ட் தொட்டிகளில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பும் பணியை வனத்துறையினர் தொடங்கினர்.

இதுகுறித்து பேசியுள்ள வனச்சரகர் மனோஜ் குமார், “கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் வறட்சியான காலநிலை நிலவுகிறது. இதனால் வனவிலங்குகளின் தாகத்தை தணிக்கும் வகையில் நான்கு இடங்களில் லாரி மூலம் தண்ணீர் ஊற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதாவது தண்ணீர் இல்லாமல் உள்ள பகுதிகளை கண்டறிந்து வனப்பகுதியில் உள்ள தரைத்தள சிமென்ட் தொட்டிகளில் ஊற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேவைக்கேற்ப வனவிலங்குகள் தண்ணீர் குடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் தண்ணீர் ஊற்றும் பணி விரைவில் தொடங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share