பாஜகவுக்கு ‘50 -50 ஃபார்முலா’ நினைவூட்ட வேண்டிய நேரமிது: சிவசேனா அதிரடி!

Published On:

| By Balaji

மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. பாஜக 158 இடங்களிலும், காங்கிரஸ் 104 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

லோக்சபா தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தல் என்பதால் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் தேர்தல் நிலவரங்கள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற இடங்களில், பாஜக 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, சிவசேனா 57 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து கேள்விகள் அதிகரிக்கும் வேளையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே சற்று முன், “கூட்டணிக்கான ஐம்பது-ஐம்பது ஃபார்முலாவை நாங்கள் முடிவு செய்திருந்தோம். இந்த ஃபார்முலா குறித்து பாஜகவுக்கு மீண்டும் நினைவூட்ட வேண்டிய நேரம் இது எனக் கூறினார்.

மேலும், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான கூட்டணி பற்றி தனது கட்சித் தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்களுடன் விவாதித்து, அதிகாரப் பகிர்வு ‘ஃபார்முலா’வை அமைதியான மற்றும் வெளிப்படையான முறையில் கூறுவேன் என்றும் தாக்கரே கூறினார்.

தேர்தல் முடிவுகளை குறிப்பிட்டுக் கூறிய தாக்கரே, “அரசியல் கட்சிகள் தங்கள் கால்களை தரையில் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் அவர்களுக்கான இடத்தைக் காட்டிவிடுவார்கள், ”என்று சிவ சேனா தலைவர் கூறினார்.

தேர்தல் துவங்குவதற்கு முன், சிவசேனா பாஜகவை விட குறைவான இடங்களில் போட்டியிட ஒப்புக்கொண்டது. இந்நிலையில், “நாங்கள் பாஜகவை விட குறைவான இடங்களுக்கு போட்டியிட ஒப்புக்கொண்டோம், ஆனால் ஒவ்வொரு முறையும் நான் பாஜகவுக்கு இடமளிக்க முடியாது. எனது கட்சி வளர நான் அனுமதிக்க வேண்டும்,”என்று தாக்கரே கூறினார்.

**ஆதித்யா தாக்கரே வெற்றி**

வோர்லி தொகுதியில் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளார் ஆதித்யா தாக்கரே. வெற்றி பெற்ற ஆதித்யா தாக்கரே, “மக்கள் என்னை பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து வாழ்த்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார். 29 வயதாகும் ஆதித்ய தாக்கரே முதன் முதலாக சட்டப்பேரவை தேர்தலில் வொர்லியில் களம் கண்டுள்ள நிலையில், இந்த வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது. சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே வெற்றிபெற்றிருக்கும் நிலையில், அவருக்கு அரசில் முக்கியப் பதவி கேட்க சிவசேனா முடிவு செய்திருப்பதாக மகாராஷ்ராவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை முதல்வர் பதவியை ஆதித்ய தாக்கரேவுக்கு கொடுக்குமாறு சிவசேனாவின் கோரிக்கை இருக்கும் என்பதே நிலவரம்.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசு அமைப்பது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, “சிவசேனாவுக்கும் எங்களுக்கும் (பாஜக) இடையே முடிவு செய்யப்பட்டுள்ளவற்றின் படி நாங்கள் செயல்படப் போகிறோம். என்ன முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது சரியான நேரத்தில் தெரியப்படுத்தப்படும்” என்றார்.

இந்த தேர்தல் முடிவுகள், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிற்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி குறித்த வாக்குறுதிகளை தேர்தலின்போது அளிக்காமல், நாட்டின் பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு உள்ளிட்ட விஷயங்களிலேயே, பா.ஜ. தலைமை அதிக முக்கியத்துவம் அளித்ததும், இந்த பின்னடைவிற்கு காரணமாக கருதப்படுகிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share