பள்ளி கட்டணம்-மாணவர்களை தண்டிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை!

public

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிற நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வந்தன. தற்போது மழலையர், நர்சரி பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் சில மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தாததால், அவர்களை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்து தண்டிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் அமர வைத்திருப்பதாக புகார்கள் வருகின்றன. எந்த சூழ்நிலையிலும் இதுபோல் கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்திற்காக வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் அவர்களை வெளியே அனுப்புவதும், பெற்றோர்களை தரக்குறைவாக பேசுவதும் அடிப்படைக் கல்வி உரிமையை மறுக்கின்ற செயலாகும்.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மேற்கண்டவாறு கல்வி கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே அனுப்பப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் எந்தவொரு மெட்ரிகுலேசன் பள்ளியிலும் இதுபோன்று ஏற்படாதவாறு பள்ளி நிர்வாகத்திற்கு தக்க அறிவுரைகள் வழங்கி, அதனை அவ்வப்போது பள்ளிகளில் செயல்படுத்துவதை பள்ளி ஆய்வின்போதும் பள்ளிப் பார்வையின் போதும் மாவட்ட ஆய்வு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக வரும் புகார்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை இயக்குநர் அலுவலகத்திற்கு என்று முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.