சிறுகுறு தொழில்: தமிழகத்துக்கு மத்திய அரசின் உதவிகள்!

Published On:

| By Balaji

பிரதமர் மோடி கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான தொகுப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தையும் அறிவித்தார். இந்த நிலையில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு ஒதுக்கப்பட்ட கடன் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்குப் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் ஜூன் 14 அன்று விரிவானதொரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்த கடன் தொகையான ரூ.3,112.63கோடியில், 46,390 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,936.68 கோடி அளவிற்குக் கடன் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்திக் குறிப்பில்,

“ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு, பல்வேறு தொகுப்பு உதவிகளை அறிவித்துள்ளது. இது தவிர, தொழில்துறையினரின் பல்வேறு பிரிவினருக்கும், ஏராளமான நிதியுதவித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், கடந்த வியாழக்கிழமை வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.29,490.81 கோடி அளவிற்கு கடனுதவி அளிக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில், ரூ.14,690,84 கோடி அளவிற்கு ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இதுவரை அனுமதிக்கப்பட்ட ரூ.3,112.63 கோடியில், 46,390 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,936,68 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும், தொழிலுக்கு புத்துயிரூட்டவும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி தேவைப்பட்டது. விவசாயம், கல்வி, தொழில்துறையினருக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டதுடன், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், பொதுத்துறை வங்கிகள் பெரும் பங்கு வகித்தன.

ஊரடங்கு காரணமாக, வேலையின்றி இருப்பதாகக் கூறும் பாளையம் கரூர் பகுதியைச் சேர்ந்த வசந்தா, இந்தக் காலகட்டத்தில், மீண்டும் தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடனுதவிகளை திரும்பச் செலுத்துவதற்கான அவகாசம், முதலில் மூன்று மாதங்களும், அதன்பிறகு, செப்டம்பர் வரை மேலும் மூன்று மாதங்களும் நீட்டிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடும் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த சிவகுமார், இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வங்கியில் பெற்ற கடனுதவி மூலம், குளித்தலையில் முடிதிருத்தகம் நடத்தி வருவதாகக் கூறும் சிவகுமார், “ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், நோய்த்தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக, போதிய அளவிற்கு வாடிக்கையாளர்கள் வராததால், உரிய வருமானம் கிடைக்கவில்லை” என்றும் தெரிவிக்கிறார்.

இதேபோன்று, பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இல்லத்தரசி செல்லக்கண்ணு, “ஊரடங்கு காரணமாக நானும் எனது கணவரும் உரிய வேலை கிடைக்காமல் தவித்த நிலையில், சுய உதவிக் குழு மூலம் மத்திய அரசின் கடனுதவி கிடைத்தது. நெருக்கடியான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு இது உதவியாக இருக்கிறது. மத்திய அரசுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த த.விஜய், வங்கிக் கடனுதவி பெற்று மளிகைக் கடை தொடங்கியுள்ளார். “வியாபாரம் சீரடையும் போது தான் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தப் போகிறேன். தற்போது மிகக் குறைந்த வருமானமே கிடைத்து வருவதால், வங்கிக் கடனுக்கான வட்டித்தொகையை செலுத்துவதே மிகுந்த சிரமமான காரியம்தான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்கள், தாங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு, நிதியுதவி மற்றும் கடனுதவி தேவை என்றும் கருதுகின்றனர். வர்த்தகம், வியாபாரம் அல்லது தனிநபர் வாழ்வாதாரமாக இருந்தாலும் சரி, பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்ட, வங்கிகளின் ஒத்துழைப்பு அல்லது பிற வகையான உதவிகள் தேவைப்படுகிறது. மத்திய அரசும், நாட்டின் பொருளாதார நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், மக்களும் தொழில் துறையினரும் நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்காக, தக்க நேரத்தில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம், பல்வேறு சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை மத்திய அரசின் திருச்சிராப்பள்ளி கள தகவல் அலுவலர் தேவி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share