இரண்டாவது முறையாக பரோலில் பேரறிவாளன் வெளியே வந்துள்ள நிலையில், தனது மகன் விடுதலை பெற்று வந்தால் தான் முழு நிம்மதி என்று அவரது தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் எழுவரை விடுதலை செய்ய கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இவர்களை விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரைத்த நிலையில் அதுகுறித்து இன்னும் முடிவெடுக்கப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு, பேரறிவாளன் தனது தந்தை குயில்தாசன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் காரணமாக பரோலில் வந்தார். 45 நாள் பரோல் முடிந்து மீண்டும் சிறைக்குச் சென்றார்.
இதற்கிடையே அவரது தாய் பேரறிவாளனை வெளியே கொண்டு வர மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். பேரறிவாளன் தந்தைக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்படைந்துள்ளதாலும், சகோதரியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அவரது தாய் அற்புதம்மாள், தனது மகனுக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதனால் பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கியது.
சில உடல்நல பிரச்சினை காரணமாக, புழல் சிறையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்ததை தொடர்ந்து வேலூர் மத்தியச் சிறைக்கு போலீசார் இன்று அழைத்துச் சென்றனர். அங்கு சில நடைமுறை முடிந்த பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது வீட்டிற்கு திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேல் தலைமையில் 35 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரறிவாளன் வீட்டுக்கு அப்பகுதியில் உள்ள மூன்று வழியாகச் செல்லலாம் என்பதால் அப்பகுதியில் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே அனுமதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது, அமைப்பு சார்ந்த நிர்வாகிகளைச் சந்திக்கக் கூடாது என்று பேரறிவாளனுக்குக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
மகன் பரோலில் வந்தது குறித்து அவரது தாய் அற்புதம்மாள், எனது மகன் பரோலில் வந்தது மகிழ்ச்சி. எனினும் 28 ஆண்டுக்காலம் அவரது வாழ்க்கை சிறையில் அழிந்துவிட்டது. எனது மகன் விடுதலை பெற்று வந்தால் தான் முழு நிம்மதி என்று தெரிவித்துள்ளார்.
�,”