)விமர்சனம்: கைதி

Published On:

| By Balaji

காவலர்களை மீட்கும் கைதி!

படம் ஆரம்பித்த முதல் 20 நிமிடங்களுக்கு உள்ளாகவே நேரடியாக கதைக்களத்தையும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி விட்டு, அடுத்த 2 மணிநேர பயணத்திற்கு பார்வையாளனை தயார்படுத்தி விடுகிறார் லோகேஷ் கனகராஜ்.

நரேன்(பிஜோய்) தலைமையிலான போலீஸ் டீம், பெருமளவிலான போதைப் பொருளை பறிமுதல் செய்து ஒரு பழைய காவல் நிலையத்தின் கீழ் பத்திரப்படுத்துகிறது. இதனையறிந்த வில்லன்கள் இரவோடு இரவாக நரேனின் டீமை கூண்டோடு அழிக்க முடிவெடுக்கிறது. பெரும் படையுடன் போதைப் பொருளை மீட்க காவல் நிலையத்திற்கு ஒரு குழுவாகவும், நரேனை கொல்ல ஒரு குழுவாகவும் விரைகிறார்கள் வில்லன்கள்.

பத்து வருட சிறை தண்டனையை அனுபவித்த கார்த்தி(தில்லி) இதுவரை பார்த்திராத தன் மகளை பார்க்கச் செல்லும் வழியில், சந்தேகத்தின் பேரில் காவலர்கள் பிடித்து வைத்திருக்கின்றனர். சூழ்நிலையால் ஒற்றை ஆளாக மாட்டும் நரேன், அந்த இரவை சமாளிக்க கார்த்தியை நாடுகிறார். இப்படி பல்வேறு புள்ளிகள் இணைந்த அந்த இரவின் பயணமே ‘கைதி’.

‘மாநகரம்’ படத்தில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படமிது. ஒரு இரவு, ஒரு கைதி, தனியாக தவிக்கும் போலீஸ், துரத்தும் வில்லன்கள், முதன் முறையாக அப்பாவை பார்க்கப் போகும் மகள் என எமோஷன்கள் கலந்த சுவாரஸ்யமான ஆக்‌ஷன் திரில்லராக வந்திருக்கிறது கைதி.

போதைப் பொருள் விற்கும் வில்லன்கள் தவிர படத்தில் வரும் எந்தக் கதாபாத்திரத்தைப் பற்றியும் வழக்கமான விளக்கங்களோ, ‘பிளாஷ் பேக்கோ’ இல்லாமல் நேரடியாகவே திரையில் உலவும் கதாபாத்திரங்களின் வழி, அவர்களின் சித்திரத்தை பார்வையாளன் கையில் கொடுத்திருக்கிறார் இயக்குநர். தீனாவிடம் கார்த்தி தன்னை பற்றிச் சொல்லும் காட்சியில் கூட முழுமையான பின்கதையாக இல்லாமல் ஒரு சின்ன அறிமுகத்தை மட்டுமே நம்மிடம் கூறுகிறார். ஒரு படைப்பாளன் பார்வையாளனுக்கு தந்த மரியாதை இது.

‘விருமாண்டியும்’, ‘பருத்தி வீரனும்’ மீண்டும் திரையில் தோன்றினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுமோ, அதுவே தில்லி(கார்த்தி). இயக்குநர் ‘விருமாண்டி’, ‘டை ஹார்ட்’ ஆகிய படங்கள் கைதியின் தாக்கமாக பேட்டிகளில் குறிப்பிட்டிருப்பதை இங்கே கூறலாம். கார்த்தியின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். முதன் முறையாக மகளின் புகைப்படத்தை பார்க்கும் அந்தக் காட்சியில் நம்மையும் மீறி கண்கள் கலங்குகின்றன. ‘மெலோ டிராமாவாக’ இல்லாமல் உண்மையான எமோஷனாக வெளிப்படும் பல சந்தர்ப்பங்கள் கைதியின் பலம்.

நரேனுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல ‘கம்-பேக்’. கார்த்தியின் கதாபாத்திரமான ‘தில்லி’யை இது தான் என வரையறுக்க முடியாது. ஆனால், பிஜோய்(நரேன்) கதாபாத்திரத்திற்கேன சில வரையறைகள் உண்டு; அந்த எல்லைகளுக்குள் இருந்து தான் ‘அண்டர்-பிளே’ செய்ய முடியும். ஒரு தேர்ந்த நடிகனுக்கான முதிர்ச்சியை நரேன் இப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். கார்த்தி – நரேனுடன் படம் முழுவதும் பயணிக்கும் காமாட்சியாக தீனா ரசிக்க வைக்கிறார்.

கைமீறி நடக்கும் நிகழ்வில், சூழ்நிலைக்கு சிறிதும் தொடர்பில்லாத கதாபாத்திரங்களின் வழி கைதி ஒரு பதட்டத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது. ஒரு ஆக்‌ஷன் திரில்லரில் முக்கியமாக கருத்தப்படும் இந்த யுக்தி சிறிது பிசகினாலும் பார்வையாளனை விட்டு விலகிவிடும். கைதியில் அது சரியாக அமைந்திருக்கிறது.

காவல் நிலையத்துக்குள்ளேயும் ஆபத்து, வெளியேயும் ஆபத்து எனும் நிலையில், 5 மாணவர்களும் புதிதாக இடம் மாற்றலாகி வரும் கான்ஸ்டபிள் ஜார்ஜ் மரியமும் சிக்கிக் கொள்கிறார்கள். ஒரு பக்கம் ‘சேஸிங்’ போய்க்கொண்டிருக்க, மறுபக்கம் இவர்களுக்கு என்ன ஆனதோ என பதட்டம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. கார்த்தியின் மகளாக வரும் அமுதா சரியான பாத்திரத் தேர்வு.

முதல் பாதியில் ஏற்படும் அந்த பிரமிப்பு இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் கைதி இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். அனைத்து சண்டைக் காட்சிகளுக்குமே வலுவான பின்னணி இருக்கிறது. இருப்பினும், ஆரம்பத்தில் கார்த்தி வில்லன்களை அடிக்கும் போது சரியாக இருந்த ஹீரோ அம்சம், இரண்டாம் பாதியில் சூப்பர் ஹீரோ-வாக மாறும் போது உறுத்துகிறது.

காவல்துறையிலிருந்து வில்லன்களுக்கு தகவல் கொடுத்து கொண்டே இருப்பவரை கடைசி வரை கண்டுபிடிக்காதது நம்பும்படியில்லை. 5 மாணவர்களும் உடனடியாக ஜார்ஜ் மரியத்திற்கு உதவுவதிலும், அவர்களது பாத்திரப் படைப்பிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு கைதியின் முக்கியமான அம்சம். மொத்த படமுமே இருளில் நடப்பதால் அந்தந்த இடங்களுக்கான விளக்கின் வெளிச்சத்தை வைத்தே ஒளியமைக்க முடியும். சவால் நிறைந்த இப்பணியை சத்யன் திறமையாக கையாண்டிருக்கிறார். சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கான கூடுதல் பலம். படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். குறிப்பாக குவாரியில் நடக்கும் சண்டைக் காட்சி நீளமாகத் தோன்றுகிறது.

குறைகளையும் கடந்து கைதி நிச்சயம் ஒரு ஆக்‌ஷன் திரில்லராக அனைவரையும் ஈர்க்கும்.

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் & விவேகானந்தா பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியம், ரமணா, தீனா, அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: சாம் சி.எஸ், ஒளிப்பதிவு: சத்யன் சூரியன், படத்தொகுப்பு: பிலோமின் ராஜ், சண்டைபயிற்சி: அன்பறிவ், கலை: என்.சதீஷ் குமார், வசனம்: பொன் பார்த்திபன்&லோகேஷ் கனகராஜ்.*

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share