எந்தவொரு பொருளையும் விரும்பும் விதத்தில் பனியாக மாற்றும் சக்தி கொண்டவர் எல்சா. அவரது சகோதரி ஆனா, துடிப்பும் குறும்பும் நிறைந்த பெண். ஆரெண்டல் நகரின் மகாராணியாக இருக்கும் எல்சாவின் காதுகளுக்கு மட்டும் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஏதோ தீயது நடக்கப்போவதை அந்தக் குரல் உணர்த்துவதாக எல்சா நம்புகிறார். அதே போன்று ஆரெண்டல் நகருக்கு புதிதாக ஒரு ஆபத்து வருகிறது. இதற்கு எல்சாவிற்கு கேட்கும் அந்த குரல் தான் காரணம் என்பதை உணர்கிறார். அதனைத் தேடி எல்சா, அவரது சகோதரி ஆனா, கிரிஸ்டோஃப், கிரிஸ்டோஃப்-இன் செல்லப்பிராணி ஸ்வென், ஓல்ஃப் என்னும் பனி மனிதன் ஆகியோர் பயணம் மேற்கொள்கின்றனர். அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது? ஆரெண்டல் நாட்டுக்கு ஏற்படும் பிரச்னைக்கு என்ன காரணம்? அந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததா? போன்ற கேள்விகளுக்கு விடைதருவதாக ஃப்ரோசன்-2 படத்தின் திரைக்கதை கரைந்து ஓடுகிறது.
ஃப்ரோசன் முதல் பாக கதையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரங்கள், ஆரம்ப காட்சியிலேயே தோன்றி புதியதொரு கதைக்களத்தில் பயணிக்க ஆரம்பிக்கின்றனர். இது ரசிகர்களுக்கு உற்சாகமூட்டி ஆர்வமுடன் படம் பார்க்க வைக்கிறது. ஃப்ரோசன்-2 தமிழ் வெர்ஷனில் படத்தின் கதாநாயகிகளான எல்சாவிற்கு ஸ்ருதிஹாசனும், ஆனாவிற்கு பிரபல சின்னத்திரைத் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி(டிடி)யும் பின்னணிக் குரல் கொடுத்திருக்கின்றனர். அதிக பாடல்கள் இடம்பெறும் இந்தப்படத்திற்கு ஸ்ருதிஹாசன் சரியான தேர்வு. தனது தங்கையின் மீதான அதீத அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையை உணர்த்தும் போதும் ஸ்ருதிஹாசனின் குரல் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறது. ஆனாவின் உற்சாகமான கதாபாத்திரத்திற்கு இயல்பாகவே சுறுசுறுப்பான டிடியின் குரல் சிறப்புத் தேர்வு. பனிமனிதன் ஓல்ஃபிற்கு சத்யனின் குரல் கச்சிதமாகப் பொருந்துகிறது.
கஷ்டம் வரும்போதும் கூட அதிலும் தனக்கான மகிழ்ச்சியைத் தேடி ஜாலியாக கடந்து செல்லும் ஓல்ஃபின் கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைக்கும் விதத்தில் உள்ளது. ஆனாவிடம் தனது காதலை வெளிப்படுத்த கிரிஸ்டோஃப் பலமுறை முயற்சி செய்தும் பயங்கரமாக சொதப்பும் காட்சிகளை சிரிக்காமல் கடந்து செல்ல முடியவில்லை. ஆரண்டெலில் இருந்து பனிக்காடு நோக்கி அவர்கள் பயணிக்கும் போது பார்வையாளர்களையும் கூடவே அழைத்துச் செல்கின்றனர். படத்தின் முக்கிய பலமான விஷுவல் எஃபெக்ட்ஸில் படக்குழுவினரின் மொத்த உழைப்பும் தெரிகிறது. நீரால் உருவான குதிரையுடன் கடலில் எல்சா சண்டையிடும் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றது. ஒரு காட்சியில் இருந்து மற்றொரு காட்சிக்கு நகர்கிறோம் என்பதைக்கூட உணர முடியாத விதத்தில் ஜெஃப் ட்ராஹெய்மின் படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. அனைவரையும் பயமுறுத்தும் கொடிய தீக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அழகை எல்சா கண்டறியும் இடம் ரசிக்கவைக்கிறது.
திரைக்கதை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக நகர்ந்து செல்வதால் எந்தக்காட்சியிலும் ரசிகர்களை சோர்வடைய வைக்கவில்லை. படத்தின் பாடல்கள் தனித்துத் தெரியாமல் கதையின் ஒரு பகுதியாகவே ஒன்றிப்போகிறது. எல்சா பாடுவதாக அமையும் பாடல்களில் ஸ்ருதிஹாசன் ஏற்கனவே நிரூபித்த தனது திறமைக்கு மேலும் வலுசேர்த்துள்ளார். குழந்தைகளை மட்டும் கவரும் நோக்கில் இல்லாமல் அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் படியான பல உணர்வுப்பூர்வமான அம்சங்களும் படத்தில் உள்ளது. படத்தின் முக்கியப் பகுதியாக எல்சா ஒரு சக்தியைத் தேடிப் பயணம் செய்கிறார். அதனை அவர் கண்டறியும் இடம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
ஒரு கார்டூன் அனிமேஷன் கதையைப் பார்ப்பது போல் அல்லாமல் விறுவிறுப்பான திரில்லர் அனுபவத்தை ஃப்ரோசன் 2 ரசிகர்களுக்கு தரும். ஜென்னிபர் லீ மற்றும் கிரிஸ் பக் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு கிரிஸ்டோஃப் பெக் இசையமைத்துள்ளார்.
�,”