0விமர்சனம்: பிகில்!

Published On:

| By Balaji

‘விஜய் படம் நடிச்சாலே பிரச்சினை பண்றாங்க. இன்னா தான் வேணுமாம் அவுங்களுக்கு’ என்று ஒருவர் கேமரா முன்பு பேசிக்கொண்டிருப்பதைக் கடந்து தியேட்டருக்குள் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. ‘அது விஜய்யோட பிரச்சினை. நாம படம் பாக்க வந்தோம் பாத்துட்டு போவோம்’ என அருகிலிருந்தவர் சொன்ன கமெண்டுக்குப் பிறகு படம் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் ஏன் பேசவேண்டும். படத்தின் விமர்சனத்துக்குள் செல்லவேண்டும்.

ராயப்பன் என்கிற ரவுடி, தன் மகனை பெரிய ஃபுட்பால் பிளேயராக பார்க்க விருப்பப்படுகிறார். தனது தொழிலுக்கு வரவேண்டாம் என்கிற கட்டளையுடன், பிகில் என்ற பெயரை ஒரு பிராண்டாக மாற்றி அடுத்தடுத்து பலரையும் தனது குப்பத்திலிருந்து வெளியே கொண்டுவரவேண்டும் என்பது ராயப்பனின் கனவு. இந்தத் திட்டத்துக்கு தடையாக இருப்பவர்களை ராயப்பனின் கடுமையான முகம் கட்டுப்படுத்துகிறது. மாநில அளவில் சிறப்பாக விளையாடி கோப்பையைக் கைப்பற்றும் பிகிலுக்கு, அடுத்து தேசிய அணிக்காக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு கிடைக்கிறது. எல்லாம் கூடிவரும் வேளையில் நடைபெறும் ஒரு சம்பவத்தால், பிகில்-ராயப்பன் ஆகியோரின் வாழ்க்கை திசைமாறிவிடுகிறது. அப்படி திசைமாறிப்போகும் பிகில் எப்படி மாநில அணியின் பயிற்சியாளராக வருகிறார் என்பதும், அவரை ஏன் பெண்கள் அணியினர் வெறுக்கின்றனர் என்பதும், கிளைமேக்ஸில் என்ன மெஸேஜ் சொல்லப்போகிறார்கள் என்பதும் தான் பிகில் பேக்கேஜ்.

மூன்றாவது முறையாகக் களம் கண்டிருக்கும் விஜய்-அட்லீ கூட்டணி, இனி இணைவார்களா என்பது சந்தேகமே எனும் நிலையில், மறக்கமுடியாத ஒரு படத்தைக் கொடுத்திருக்கின்றனர் என்பது மட்டும் உறுதி. யாரால் மறக்கமுடியாது?

தமிழ்நாட்டிலிருந்து தேசிய அணிக்காக விளையாடச் செல்லவேண்டும் என்ற குறிக்கோளுடன் 10 வயதிலிருந்து தன்னைத் தயார்படுத்திக்கொண்டு, கிழிந்த ஷூக்களுடன் களம் கண்டு, சில காலம் கழித்து எந்த காரணத்துக்காக வெளியேற்றப்பட்டோம் என்றே தெரியாமல் இப்போதும் கூட வீட்டில் உட்கார்ந்துகொண்டிருக்கும் சில முன்னாள் பிளேயர்களால் இந்தப் படத்தை மறக்கமுடியாது. பணம் இல்லாத ஒரே காரணத்துக்காக ஒருவரை இந்த நாடு தனது சார்பாக சர்வதேச மேடைகளில் ஏற்றாது என்று முகத்தில் அடித்தது போல் சொல்லப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களால் இந்தப் படத்தை மறக்கமுடியாது. மிக முக்கியமாக, ஸ்போர்ட்ஸ் மூலம் என் நாட்டுக்குப் பெருமைத் தேடித்தரவேண்டும் என்று நினைக்கும் யாராலும் இந்தப் படத்தை மறக்கமுடியாது. காரணம், கண் முன்னே தெரியும் எதிரணியின் பிளேயரை எப்படி ஓவர்டேக் செய்யவேண்டும் என்று சொல்லித்தரும் எந்த பயிற்சியாளராலும், அடுத்த கட்டத்துக்குச் சென்றதும் உன் பின்னாலிருந்து தடவிக் கொடுத்து கீழே தள்ளும் உள் அரசியலை சொல்லமுடியாது. அதை சொல்லியிருப்பதற்காகவே பிகிலை பாராட்டலாம். இங்கு எந்த பயிற்சியாளரையும் குறை சொல்லவில்லை. ஆனால், அவர்களது கையறு நிலையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்கள் எல்லோரும் பிகில் படத்தில் வரும் கதிர் போலவே இருக்கவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

பிகிலுக்கு ஒரு ராயப்பன் கிடைத்தது போல, தமிழ்நாடு பெண்கள் அணிக்கு ஒரு மைக்கேல் கிடைத்தது போல, கதிர்களுக்கு யாரும் கிடைப்பதில்லை. அவர்கள், தேசிய விளையாட்டு அரசியலைப் பார்த்து, அதன் வெப்பம் தாங்காமல் வந்துவிடுகின்றனர். அப்போதும் அவர்களை அரசியல் விடுவதில்லை. இப்படிப்பட்ட கதிர்களுக்கான தீர்வு என்னவென்பதை சொல்லாமல், ராயப்பனின் சம்பவங்களை நியாயப்படுத்தியதிலும், மைக்கேலின் செய்கைகளை பிரம்மாண்டப்படுத்தியதிலும் பிகில் சத்தமில்லாமல் போய்விட்டது.

தேசிய விளையாட்டு அரசியல் முக்கியமானது தான் என்றாலும், அவர்களுக்கு உதவும் மாநில விளையாட்டு அரசியல் என்னவென்பதைப் பற்றிக் கூறாததில் பிகில் சோர்ந்துவிட்டது. மாநில அளவிலான திரைக்கதையின்போது விஜய் என்ற ஒரு நடிகரை ‘CM(Captain Micheal)’ என்று புரமோட் செய்யவும், ‘நீங்க வந்தாதான் நாங்க நல்லா இருப்போம்’ என இமேஜ் பில்டப் செய்வதிலும், ‘உங்க அட்மின் ஃபேஸ்புக் போஸ்ட் போட்டுட்டார்’ என சொந்தப் பழிவாங்கலுக்கும் பயன்படுத்தியிருந்த சமயத்தில் மாநில விளையாட்டு அரசியலைப் பற்றிப் பேசியிருந்தால் அட்லீயை வெகுவாக பாராட்டியிருக்கலாம். இது அவரால் முடியாததில்லை,;தேசிய விளையாட்டு அரசியலுக்குள் சென்ற பிறகும் ஆர்தடக்ஸ் ஃபேமிலியின் திருமணமான பெண்ணை விளையாடக் கூட்டிவரும் காட்சியையும், ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணை ‘வாம்மா விளையாட போகலாம்’ எனக் கூட்டிவந்ததும் அட்லீயால் முடிந்திருக்கிறது என்றால் அதுவும் முடிந்திருக்கும்.

முக்கியமான இந்த சில கேரக்டர்களைத்தாண்டி படத்தில் வந்த அனைத்தும் இடைச்செருகல்கள் தான். 500 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேண்டும் என்று கேட்ட இடத்தில், ஒரு நபர் எக்ஸ்ட்ராவாக இருந்தால் ‘எண்ணிப் பார்க்கவா போகிறார்கள் உள்ளே போய் நில்லுங்கள்’ என்று சொல்வது போல படத்தில் நட்சத்திரப் பட்டாளத்தை சேர்க்கவேண்டும் என்பதற்காகவே சேர்த்ததுபோல ஒவ்வொரு காட்சியும் கூட்டமாகவே இருப்பது ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பாக இருக்கிறது. அட்லீ ஷங்கரின் அசிஸ்டண்டாக இருந்தார் என்பதை இப்படியெல்லாமா நிரூபிப்பது?

குறைகள் இருந்தாலும், பிகிலில் பேசப்பட்ட அரசியல் ஒவ்வொன்றையும் தமிழகத்தின் எல்லா இளைஞர்களும் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. ஊருக்குள் ‘எந்தத் தெருவில் உன் வீடு இருக்கு?’ என்று கேட்கப்படும் கேள்வியும், தமிழ்நாட்டுக்குள் ‘உனக்கு சொந்த ஊரு எது’ என்று கேட்கப்படும் கேள்வியும், தமிழ்நாட்டுக்கு வெளியே ‘உன் அப்பா என்ன வேலை செய்கிறார்?’ என்று கேட்கப்படும் கேள்வியும் ஒன்று தான் என்பதை இளைஞர்கள் புரிந்துகொண்டு வளர்ந்தால் இங்கு ராயப்பனுக்கும், மைக்கேலுக்கும் வேலையே இல்லை. ஆயிரம் பிகில்களும், லட்சக்கணக்கான கதிர்களும் தமிழகத்தை சர்வதேச அளவுக்குக் கொண்டு செல்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

‘விஜய் படம் நடிச்சாலே பிரச்சினை பண்றாங்களே’ என்று கவலைப்பட்ட ரசிகர்களுக்கு, சாதிக்கவேண்டும் என்று ஒரு பெண் வெளியே கிளம்பினால் எவ்வளவு பிரச்சினை செய்வார்கள் என்பதை பிகில் விளக்கியிருக்கிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share