வனத்தைப் பாதுகாக்க பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!

Published On:

| By admin

வனத்தைப் பாதுகாக்கும் வகையில் வனத்துறையில் 30 சதவிகித பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், “வனக்காப்பாளர், வனக்காவலர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வனத்தைப் பாதுகாக்கும் வகையில் வனத்துறையில் 30 சதவிகித பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனத்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு ஓய்வு அறையுடன் கூடிய அலுவலகம் அமைத்து கொடுக்க வேண்டும். வனத்துறை நிர்வாகத் திறனை மேம்படுத்த வனத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்த தலைமை பணியாளர் அலுவலர் பதவியை மீண்டும் கொண்டு வர வேண்டும்” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து மேலும் பேசிய தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.சிவபிரகாசம், “வனவிலங்குகள், மனிதர்கள், வனத்தின் பாதுகாப்புக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வகுக்கப்பட்ட வனச்சட்டங்களை தற்போதைய சூழலுக்கேற்ப மாற்ற வேண்டும். தற்காலிக பணியாளர்களாக பணி செய்யும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்படுவது அதிகாரிகளின் தவறான பரிந்துரையாகும். வனவிலங்குகள் இறப்பதைத் தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் போக்குவரத்துக்கு தடை விதித்தால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இதுதொடர்பாக வன அலுவலர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். இதே போல் திம்பம் மலைப்பாதையை பயன்படுத்தும் மக்களிடமும் கருத்து கேட்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share