25 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது இந்தியாவில் கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் பெய்த கனமழையினால் 1,673 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
2015 சென்னை வெள்ளம், 2018 கேரள வெள்ளத்தைத் தொடர்ந்து தற்போது வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. புனே, மும்பை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. கடந்த ஜூன் மாதம் முதல் நான்கு மாதங்களில் பல்வேறு இடங்களில் பெய்யும் கனமழையினால் 1,600 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் நீடிக்கும் பருவமழை, 50 ஆண்டுகள் மழை பொழிவின் சராசரியை விட 10 சதவிகிதம் அதிகமாகப் பெய்துள்ளது. கடும் மழையின் காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் சமீபத்திய கடுமையான மழையால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, கடந்த வெள்ளிக்கிழமை முதல் 144 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
சுமார் இரண்டு மில்லியன் மக்கள் வசிக்கும் பிகாரின் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள தலைநகர் பாட்னாவில், உணவு மற்றும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க இடுப்பு அளவு நீரில் அலைந்துகொண்டிருப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள வெள்ள பாதிப்பு தகவலின்படி, கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் 29ஆம் தேதி வரை மொத்தம் 1,673 பேர் கடும் மழையால் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
மழை மற்றும் வீடுகள் இடிந்து விழுவதால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் முன் கணிப்பு முறைகள் குறைவு ஆகியவை பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். காடுகளை அழித்தல், நீர்நிலைகள் குறைந்து வருவது, பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக வெள்ள பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.�,