உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக அனைவரும் கொரோனாவால் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது, சமீபத்தில்தான் கொரோனா கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில், குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகம் பரவும் நோயாகும். சில வாரங்களுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளில் சில குரங்கு அம்மை நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டது.
இது நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களிடம் இருந்து மட்டும்தான் பரவும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் உலகில் 29 நாடுகளில் தற்போது பரவியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், “இந்த குரங்கு அம்மை நோய் 29 நாடுகளில் தற்போது 1000க்கும் மேற்பட்டவர்களுக்குப் பரவியுள்ளது. இந்த நோய் கொரோனா அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது. குரங்கு அம்மை நோய் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அது தற்போது கட்டுப்படுத்தும் நிலையில்தான் உள்ளது” என்று கூறினார்.
மேலும் இந்த நோய் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களிடம் இருந்து தான் பரவும் என்பதை மீண்டும் உறுதிபடுத்திய உலக சுகாதார அமைப்பு, குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த நோய் காற்றின் மூலம் பரவுமா என்பதை தெரிந்துகொள்ள இன்னும் விரிவான ஆய்வுகள் தேவை என்று தெரிவித்துள்ளது.
.