தமிழகத்தில் கஜா புயல் வீசி கடுமையாக சேதம் ஏற்பட்டபோதும் பிரதமர் மோடி பார்வையிடவோ, இரங்கல் தெரிவிக்கவோ இல்லை என்று சர்ச்சை ஏற்பட்டது. அதேபோல அண்மையில், கர்நாடக மாநிலத்திலும் கடும் மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் அதுபற்றி பிரதமர் அக்கறை காட்டாமல் பீகார் மாநில வெள்ளம் பற்றி அக்கறை காட்டுகிறார் என்று கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. ஒருவரே பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுவாகவே பாஜகவில் மோடி, அமித் ஷா ஆகியோரின் தலைமைத்துவம் வந்ததில் இருந்து மோடிக்கு மாற்றுக் கருத்து சொல்லக் கூட பாஜகவில் பலரும் தயங்குவதாக கட்சிக்குள்ளேயே பலர் ரகசியமாக சொல்லுகிறார்கள்.
இந்த நிலையில்தான் கர்நாடக மாநில நலனுக்காக தன் கட்சியை சேர்ந்த, பிரதமர் நரேந்திர மோடிக்கே எதிராக கருத்து தெரிவித்துள்ளார் விஜயபுரா எம்.எல்.ஏ.வான பசன கவுடா பாட்டில்.
பீகாரில் கடந்த சில தினங்களாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாட்னா நகரமே மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “பீகார் வெள்ள நிலவரம் பற்றி முதல்வர் நிதீஷ்குமாரிடம் பேசினேன். மாநில அரசோடு சேர்ந்து மத்திய அரசின் அமைப்புகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசு எல்லாவகையிலும் பீகாருக்கு உதவும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றி நேற்று (அக்டோபர் 1) பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ. பசனகவுடா, “பிரதமர் பீகார் வெள்ளம் பற்றி ட்விட்டரில் பதிவிட்டதைப் பார்த்ததும் சமூக தளங்களில், ‘பிரதமர் கர்நாடக வெள்ளத்தைப் பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை. கர்நாடகாவில் இப்போதைக்கு தேர்தல் எதுவும் வராததாலோ’ என்று கமென்ட் அடித்து வருகிறார்கள். கட்சி இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இல்லையென்றால் கர்நாடகாவின் தென் பகுதியில் பாஜக இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்” என்ற பசன கவுடா மேலும்,
“கர்நாடக பாஜகவைப் பொறுத்தவரை இரு அதிகார மையங்கள் இருக்கின்றன. ஒன்று டெல்லியிலும், ஒன்று பெங்களூருவிலும் இருக்கின்றன. இதில் டெல்லி அதிகார மையம் முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் வாழ்வை முடித்துவிட நினைக்கிறது. இது கட்சிக்குள்ளேயே ஒருவரை அழிப்பதற்கான இலக்கு வைத்து நடக்கும் அரசியல். நீங்கள் நினைத்துவிட்டால் ஒரு தனி நபரின் அரசியலை முடிவுக்குக் கொண்டுவரலாம். ஆனால் கர்நாடகாவின் அரசியலை முடிவுக்குக் கொண்டு வர முடியாது” என்று கோபமாக தெரிவித்திருக்கிறார் பசனகவுடா.
இவர் முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர், முன்னாள் மத்திய அமைச்சரும் கூட. எடியூரப்பா கர்நாடக முதல்வர் ஆவதற்கே மோடி முட்டுக் கட்டைப் போட்டதாகவும் அதை மீறி மாநிலத்தில் தனக்குள்ள செல்வாக்கால் எடியூரப்பா முதல்வர் ஆனதாகவும் கட்சிக்குள்ளேயே பலரும் சொல்கிறார்கள்.. அண்மையில் இந்தி மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று அமித் ஷா சொன்னதற்கு தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் முதல்வர் எடியூரப்பா எதிர்ப்பு தெரிவித்தார் என்பது இங்கே நினைவுகொள்ளத் தக்கது.
இந்நிலையில் எடியூரப்பாவை, அரசியலில் இருந்து அவரை அப்புறப்படுத்துவதற்காக மத்திய தலைமை முயற்சிக்கிறது என்று பசனகவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
மோடி, அமித் ஷாவுக்கு எதிராக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் குரல்தன பசனகவுடா மூலம் வெளிப்பட்டிருக்கிறது என்கிறார்கள் கர்நாடக பாஜகவினர்.�,