மோடிக்கு கடிதம் எழுதிய 260 சர்வதேச எழுத்தாளர்கள்!

Published On:

| By Balaji

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆதிஷ் தசீரின் வெளிநாட்டு குடிமகன் (OCI) அட்டை நிலையை ரத்து செய்வதற்கான முடிவை மறுஆய்வு செய்ய 260 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற வெளிநாட்டு மற்றும் இந்திய ஆசிரியர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த வாரம், உள்துறை அமைச்சகம், தசீர் 1955 குடியுரிமைச் சட்டத்தின்படி OCI அட்டையை வைத்திருக்க தகுதியற்றவர் என்று தெரிவித்தது. ஏனெனில் அவர் தனது மறைந்த தந்தை பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற உண்மையை மறைத்துவிட்டார்” எனக் குறிப்பிட்டிருந்தது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறும் போது, “ஆதீஷ் தசீருக்கு தனது இந்திய குடிமகன் (பிஐஓ)/வெளிநாட்டில் இருக்கும் இந்திய குடிமகன் (ஓ.சி.ஐ) அட்டைகள் தொடர்பாக அவருடைய பதில் அல்லது ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் பதில் அளிக்க தவறிவிட்டார். அதனால், குடியுரிமைச் சட்டம் 1955 இன் படி, ஆதிஷ் அலி தசீர் ஒரு வெளிநாட்டில் இருக்கும் இந்திய குடிமகன் அட்டையை வைத்திருக்க தகுதியற்றவர். அவர் மிக அடிப்படைத் தேவைகள் மற்றும் மறைக்கப்பட்ட தகவல்களுக்கு தெளிவாக இணைக்கவில்லை” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த எழுத்தாளர் ஆதிஷ் தசீர் ஒரு நாவலாசிரியர், கட்டுரையாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். இந்த ஆண்டு மே மாதம் டைம் பத்திரிக்கையில் பிரதமர் மோடியை விமர்சித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில் பிரதமர் மோடியை பிரிவினையின் தலைவர் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஓரான் பாமுக், சிமானந்தா அதிச்சே, சல்மான் ருஷ்டி, கிரிஸ்டியன் அமன்பூர், மார்கரேட் அட்வூட், அனிதா தேசாய், ஜெஃப்ரீ யூகண்டீஸ், மியா ஃபர்ரோவ், கிளோரியா ஸ்டெய்னெம், ஜும்பா லஹரி உள்ளிட்ட சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் ஆதிஷ் தசீரின் வெளிநாட்டு குடிமகன் (OCI) அட்டை நிலையை ரத்து செய்வதற்கான முடிவை மறுஆய்வு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்து எழுதியுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தில், “இந்திய அரசாங்கத்தை விமர்சித்த அவரது எழுத்து மற்றும் கட்டுரையின் காரணமாக தசீர் மிகவும் தனிப்பட்ட முறையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதிஷ் தசீரின் தந்தை சல்மான் தசீர் ஒரு பாகிஸ்தான் நாட்டவராக இருந்தபோதிலும் அவரது தாயார் தவ்லீன் சிங், இந்தியர் ஆவார். தி இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த பத்திரிகையாளரும் கட்டுரையாளருமாக இருந்தவர் இவரது தாய். இவரது தந்தை, சல்மான் தசீர் பாகிஸ்தானின் ஒரு முக்கிய அரசியல்வாதி. தனது நாட்டின் நிபந்தனைச் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பியதற்காக படுகொலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share