சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் உறவுகள் குறித்து பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்காகக் கடந்த பத்துநாட்களுக்கும் மேலாகவே பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
நாளை (அக்டோபர் 11) பிற்பகல் சென்னை வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரத்திற்குப் புறப்பட்டுச் செல்கின்றனர். அங்குக் கலைநிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னை முதல் மாமல்லபுரம் வரை வழியெங்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அர்ஜூனன் தபசு, கடற்கரை கோயில், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் இடம், ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினர்.
இரு நாட்டுத் தலைவர்களின் வருகையை ஒட்டி சென்னையும், மாமல்லபுரமும் தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துள்ளன. இன்று காலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், மோடி, மற்றும் சீன அதிபர் வருகைக்காகச் சென்னையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றிவிடப்படுவதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜி.எஸ்.டி சாலை ( சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை ) , அண்ணா சாலை ( கத்திப்பாரா முதல் சின்ன மலை வரை ), சர்தார் வல்லபாய் படேல் சாலை , ராஜீவ் காந்தி மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய சாலைகளில் இரு நாட்டுத் தலைவர்களின் வருகையால் பொது மக்களின் பயணங்கள் தாமதமாக வாய்ப்புள்ளது. இதனால், கல்வி நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சாலைகளில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் இந்த இரண்டு நாட்களிலும் காலை 6 மணி முதல் 11 மணி வரை செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11 அன்று, 12.30 முதல் 14.00 மணி வரை பெருங்களத்தூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜி.எஸ்.டி சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் ஜீரோ பாயின்ட் சந்திப்பில் இருந்து மதுரவாயல் புறவழிச் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
மேலும் சென்னை தென்பகுதியிலிருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் ரோடு வழியாக , குரோம்பேட்டை – தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச் சாலையைப் பயன்படுத்திச் செல்லலாம். 11.10.2019 அன்று, 15.30 மணி முதல் 16.30 மணி வனர ஜி,எஸ்.டி சாலையில் வரும் ஆனனத்து வாகனங்களும் கத்திப்பாரா சந்திப்பிலிருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல், 100 அடி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
11.10.2019 அன்று, 14.00 மணி முதல் 21.00 மணி வரை, ராஜீவ் காந்தி சாலையில் (OMR) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாகத் திருப்பிவிடப்படும். கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கனர சந்திப்பில் முட்டுக்காடு நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. 12.10.2019 அன்று, 07.30 மணி முதல் 14.00 மணி வனர, ராஜீவ் காந்தி சாலையில்(OMR) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாகத் திருப்பிவிடப்படும். 12.10.2019 அன்று, 07.00 மணி முதல் 13.30 மணி வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும் ஆனனத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால் இன்று முதலே சென்னையில் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடும் நெரிசலால் உரிய நேரத்துக்குச் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர். இந்நிலையில் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நாளை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார்
�,”