மார்ச் 25 ஆம் தேதி இரவு 12 மணி முதல் பிரதமர் மோடி அறிவித்த ‘இந்தியா லாக் டவுன்’ நாளை காலை 6 மணியோடு முடிவடையும் நிலையில்… இன்று (ஏப்ரல் 14) காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு நான்காவது முறையாக உரையாற்றுகிறார் மோடி. மார்ச் 19, மார்ச் 24, ஏப்ரல் 3 தேதிகளில் ஏற்கனவே நாட்டு மக்களிடம் கொரோனா வைரஸ் தொற்று பற்றி உரையாற்றியுள்ளார் மோடி.
கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் 25 மாவட்டங்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகவில்லை என்று அரசாங்கம் தனது தினசரிக் குறிப்பில் நேற்று வெளிப்படுத்தியுள்ள நிலையில், தனது அடுத்த கட்ட அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஒடிசா, ஹரியானா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா ஆகியவை ஏப்ரல் 14 நள்ளிரவு தொடங்கி ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன. வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மேகாலயா மற்றும் மிசோரம், மாநிலங்களும் ஏப்ரல் 30 வரை பூட்டுதலை நீட்டித்தன.
நேற்று (ஏப்ரல் 13) ஒரு வெப் செமினாரில் பேசிய டாக்டர் வி.கே.பால் ( இவர் கொரோனா வைரஸ் தடுப்புக்காக மத்திய அரசு அமைத்த 11 குழுக்களில் முக்கியமானவர்)
“இந்தியாவின் பரப்பளவைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மிகக் குறைவானது. ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டால் கூட அதை சமாளிக்கும் வகையில் நமது நாடு ஆயத்தமாக இருந்துகொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார். ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் கணக்கு என்பது இத்தாலி அதன் உச்சத்தில் அனுபவித்ததைப் போன்றது. அதேநேரம் ஊரடங்கு உத்தரவை, ‘மிகப்பெரிய பொது சுகாதார முடிவு’ என்று குறிப்பிட்டார் டாக்டர் பால்.
ஐ.சி.எம்.ஆர் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஆர் ஆர் கங்ககேத்கர் ஏப்ரல் 13 ஆம் தேதி கூறுகையில், “இந்தியாவில் தற்போது ஆறு வாரங்களுக்கு சோதனைகளை மேற்கொள்ள போதுமான ஏற்பாடுகள் உள்ளன. நேற்று வரை 2,06,212 சோதனைகள் செய்தோம். கடந்த 24 மணி நேரத்தில் 14,855 சோதனைகள் 156 அரசு ஆய்வகங்களிலும், 69 தனியார் ஆய்வகங்களில் 1,913 சோதனைகளும் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இப்படி நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா விவரங்களை எடுத்து வைத்துள்ள மோடி, நேற்று வியட்நாம் பிரதமருடன் அந்நாட்டுக்கு உதவுவது தொடர்பாகப் பேசியுள்ளார். சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் தற்போதைய நிலவரங்களையும் அவற்றின் மீட்சித் தன்மையையும் ஆராய்ந்துள்ள மோடி இன்று காலை 10 மணிக்கு என்ன அறிவிப்பு வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஊரடங்கு உத்தரவா அல்லது பாதிக்கப்படாத சில இடங்களுக்குத் தளர்வா என்பவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. பத்து மணிக்கு தெரிந்துவிடும், அடுத்த பதினைந்து நாட்களுக்கான இந்தியாவின் நிலை.
**-வேந்தன்**
�,”