மோடி சென்ற விமானத்தில் கோளாறா?: ஊடகங்கள் மீது விசாரணை!

Published On:

| By Balaji

பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு என்று தவறாகச் செய்தி வெளியிட்ட பிரபல தமிழக ஊடகங்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

7 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இதற்காகக் கடந்த 20ஆம் தேதி இரவு டெல்லியிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். அப்போது மோடி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகத் தமிழக ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியிடப்பட்டன. அதாவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்பட்ட பிறகே மீண்டும் அமெரிக்கா நோக்கி விமானம் புறப்பட்டது. இதனால் மோடி அமெரிக்கா செல்வதில் இரண்டு மணி நேரம் தாதமதம் ஏற்பட்டது என்று செய்திகள் தெரிவித்தன.

சில தமிழக ஊடகங்களில் மட்டுமே இதுபோன்று செய்திகள் வெளியாகின. தேசிய ஊடகங்களில் இந்த செய்திகள் வெளியாகவில்லை. பிரபல செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.யில் மட்டும் மோடி சென்ற விமானம் டெக்னிக்கல் ஹால்ட்டாக பிராங்க்பர்ட்டில் நிறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. டெக்னிக்கல் ஹால்ட் என்பது நீண்ட தூரம் செல்லும் போது, எரிபொருள் நிரப்ப மற்றும் தொழில்நுட்ப ரீதியில் விமானம் சரியாக இயங்குகிறதா என்பதைச் சரிபார்க்க நிறுத்தப்படுவதாகவும். இது தவறுதலாக புரியப்பட்டு டெக்னிக்கல் ஃபால்ட் என்ற வகையில், அதாவது பிரதமர் சென்ற விமானத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன.

இந்நிலையில் இவ்வாறு செய்திகளை வெளியிட்ட, புதிய தலைமுறை, நியூஸ் 7, நியூஸ் 18 ஆகிய பிரபல தமிழக ஊடகங்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. டெக்னிக்கல் ஹால்ட் என்ற வகையில் ஜெர்மனியில் இறங்கித் தான் அமெரிக்காவுக்குச் சென்றது விமானம். ஆனால் டெக்னிக்கல் ஃபால்ட் என்று உள்நோக்கத்துடன் செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளதா என்று மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரம் தற்போது, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share