Qமோடியை சந்திக்கும் சரத் பவார்

Published On:

| By Balaji

பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் மகாராஷ்டிர அரசியல் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகிவருகின்றன.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தும், மூன்று கட்சிகளால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரையின் அடிப்படையில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, புதிய கூட்டணி உருவாவது தொடர்பாக காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) – சிவசேனா கட்சிகள் இடையே குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில், உத்தவ் தாக்கரே ஐந்து ஆண்டுகளுக்கு முதல்வர் என்றும், காங்கிரஸ்-என்சிபியை சேர்ந்தவர்கள் துணை முதல்வர் பதவியில் வகிப்பார்கள் என்றும் முடிவாகியுள்ளதாக நேற்று(நவம்பர் 19) செய்திகள் வெளியானது.

இதனிடையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் துவங்கிய முதல் நாளில்(நவம்பர் 18), பிரதமர் மோடி, “இன்று நான் என்சிபி மற்றும் பிஜேடி ஆகிய இரு கட்சிகளைப் பாராட்ட விரும்புகிறேன். இந்த கட்சிகள் நாடாளுமன்ற விதிமுறைகளை கண்ணியமாக கடைபிடித்துள்ளன. என்னுடைய கட்சி உள்ளிட்ட பிற கட்சிகள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் ”என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடியும் சரத் பவாரும் சந்திக்கவுள்ளனர். இது குறித்து, என்சிபி செய்தித் தொடர்பாளர் மாலிக் கூறும்போது, “மகாராஷ்டிராவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதற்காக சரத் பவார் பிரதமரை சந்திக்கவுள்ளார்”எனக் கூறினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருவரும் சந்திக்கவுள்ளனர். மகாராஷ்டிர அரசியல் குறித்தும் இச்சந்திப்பின் போது விவாதம் நடைபெறும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. என்சிபியை நாடாளுமன்றத்தில் மோடி புகழ்ந்த இரு தினங்களுக்குப் பிறகும், உத்தவ் தாக்கரே தான் முதல்வர் என கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்ட பின்னரும், மோடி-சரத் பவார் சந்திப்பு முக்கியத்துவம் பெருகிறது.

இது குறித்து செய்தியாளர்கள், சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்திடன் கேள்வி எழுப்பினர். பிரதமர் நரேந்திர மோடி முழு தேசத்தின் பிரதமர் என்று கூறிய, சிவசேனாவின் சஞ்சய் ரவுத், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் யார் வேண்டுமானாலும் பிரதமரை சந்திக்க முடியும். மகாராஷ்டிராவில் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சரத் பவாரும் உத்தவ் தாக்கரேவும் விவசாயிகள் குறித்து அதிகம் கவலைப்படுபவர்கள்” என்றார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share