டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் செல்போன்களுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று (மார்ச் 14) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 39ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இதில் நாட்டின் நிதி நிலையை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி தற்போது 12 சதவிகிதமாக இருக்கும் நிலையில் அது 18 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. செல்போன்களின் உதிரிபாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. இதுபோன்று பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை வழங்குநர்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கை மற்றும் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் தீக்குச்சிகளுக்கு 12 சதவிகிதம் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரி விகிதம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரூ.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு, குறு நிறுவனங்கள் 2018 – 19 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி ஆர்9சி ஆவணம் தாக்கல் செய்வதில் விலக்கு அளிக்கப்படுகிறது. ரூ.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்கள் மீதான காலதாமத அபராதம் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதால் அதன் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்போது வெளியிட்டுள்ள ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று செல்போன் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. ஜியோமி இந்திய நிறுவனர் மனு ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தி இருப்பது தொழில்துறையை நொறுக்கிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் ஸ்மார்ட்போன் தொழில்துறை ஏற்கனவே லாபத்துக்காகப் போராடி வருகிறது. எனவே ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை அதிகரிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் வரி விகிதம் உயர்வு என்பது தொழில்துறையின் மேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் பலவீனப்படுத்தும். எனவே பிரதமர் மோடியும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்த வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
**அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்**
2017-2018ஆம் ஆண்டுக்குத் தமிழகத்துக்கு வரப்பெற வேண்டிய ஜிஎஸ்டி தொகை மற்றும் நடப்பு நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார். மேலும், துணி மற்றும் ஆயத்த ஆடை மீதான வரியானது 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்த்துவது ஏற்புடையது அல்ல. உரங்கள் மீதான வரியை 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்த்துவதால் உரங்கள் மீதான விலையும் அதிகரிக்கும். எனவே, இந்த கருத்துரு முற்றிலும் ஏற்புடையதாக இல்லை என்று கூறி இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்புத் தெரிவித்தார்.
**-கவிபிரியா**�,