நிர்பயா வழக்கில் குற்றவாளி தாக்கல் செய்த மறுசீராய்வு வழக்கு விசாரணையிலிருந்து தலைமை நீதிபதி விலகியுள்ளார். இதனால் வேறு அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
2012ல் மருத்துவ மாணவி நிர்பயா, கும்பல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதானவர்களுக்கு 2017இல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நிர்பயாவின் தாய் உட்பட நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதாகச் சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் நான்காவது குற்றவாளியான அக்ஷய் குமார், தூக்குத் தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதி பானுமதி, நீதிபதி அசோக் பூஷண் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங், இந்த விவகாரத்தில் அரசியல், பொது மற்றும் ஊடக அழுத்தம் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனிடையே இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தலைமை நீதிபதியின் உறவினராக வழக்கறிஞர் அர்ஜுன் பாப்டே வாதாடவுள்ளதால் வழக்கில் இருந்து விலகுவதாகத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கை வேறு அமர்வு நாளை(இன்று) விசாரிக்கும் என்றும் அந்த அமர்வில் நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் இடம் பெறுவர் என்றும் தெரிவித்தார். அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இதில் பிறப்பிக்கப்படும் உத்தரவைத் தொடர்ந்தே நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.�,