சிபிசிஐடி கையிலெடுக்கும் நீட் விடைத்தாள் முறைகேடு வழக்கு!

Published On:

| By Balaji

நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணைநடத்தி 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டு ம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான ஓஎம்ஆர் விடைத்தாள் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், “2020 அக்டோபர் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 700க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாகக் காட்டிய நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248ஆகக் குறைத்து ஓஎம்ஆர் வெளியிடப்பட்டதாகக் கூறியிருந்தார்.

அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தன்னுடைய மதிப்பெண் 594 ஆக காட்டியப் போது எடுக்கப்பட்ட ‘ஸ்க்ரீன் ஷாட்’ புகைப்படங்களும் மாணவர் தரப்பில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று( மார்ச் 1) நீதிபதி புகழேந்தி முன்பு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ வாதத்திற்காக ஒரு மாணவனே இணையதளத்தில் மதிப்பெண்களை மாற்ற முடியும் என்றால், இதுபோன்று பல மாணவர்களும் அப்படி மாற்றியிருக்கலாமே. தேசிய தேர்வு முகமையின் குளறுபடியால் மாணவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். அதனால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறினார்.

அப்போது, இந்த வழக்கில், சைபர் குற்றங்களைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற சிபிஐ அலுவலர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வு பிரிவை அமைக்கலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ”மனுதாரர் கூறுவதுபோல் புலனாய்வு குழு அமைக்கப்பட்டால், தொடர்ந்து பல மாநிலங்களும் அவரவர் பங்குக்கு பிரதிநிதிகளை நியமிக்க சொல்வார்கள்.

தேசிய தகவலியல் மையம் ( National informatics centre) இந்த விவகாரங்களை விசாரிக்க தகுதி வாய்ந்தது என்பதால், அவர்கள் இதனை விசாரிக்கட்டும் எனவும், அவர்கள் சுதந்திரமான அமைப்பு என்பதால் இதில் மத்திய அரசின் தலையீடு எதுவும் இருக்காது என தெரிவித்தார்.

மேலும், தேசிய தேர்வு முகமை (National testing agency) சார்பில், குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட முடியும். இந்த வழக்கில் அப்படி ஏதும் முகாந்திரம் இல்லை எனவும் வழக்கறிஞர் வாதிட்டார்.

ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் தாளில் திருத்தம் செய்யவோ, ஏற்கெனவே எழுதியவற்றை அழிக்கவோ முடியாது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அது இந்த நிறுவனத்தின் மீதும், கட்டமைப்பின் மீதும் தவறான பிம்பத்தை ஏற்படுத்தும்” எனவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கு குறித்து சைபர் கிரைம் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.

யார் மீதும் வழக்குப் பதிவு செய்யாமல் ஆரம்பக்கட்ட விசாரணை மட்டும் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் சிபிசிஐடி காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share