மாமல்லபுரத்தை அடுத்து மதுரையைக் குறிவைக்கும் மோடி

Published On:

| By Balaji

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீன் ஜிங்பின்னும் கடந்த அக்டோபர் 10, 11 தேதிகளில் மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சி மாநாட்டை நடத்தினார்கள். மாமல்லபுரத்தில் வேட்டி கட்டிக் கொண்டு நின்ற மோடியைப் பார்த்து தமிழ்நாட்டில் பலரும் ஆச்சரியப்பட்டார்கள். கோ பேக் மோடி என்று சொல்லிக் கொண்டு ஒரு தரப்பினர், மோடியின் வருகையை ட்விட்டரில் எதிர்த்தபோதிலும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சியினர் முறைசாரா உச்சி மாநாட்டை நடத்த மாமல்லபுரத்தை தேர்வு செய்ததற்காக மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்தனர் மோடிக்கு.

அக்டோபர் 12 ஆம் தேதி பிரதமர் மோடி கோவளம் கடற்கரையில் வாக்கிங் செய்தபோது குப்பைகளை அகற்றியதும் தமிழக மக்களிடம் விமர்சனங்களைத் தாண்டிய வரவேற்பை ஏற்படுத்தியது.

இந்த பாசிட்டிவ் ரிப்போர்ட்டுகளால்தான் பிரதமர் அடுத்தடுத்து தனது மாமல்லபுரம் பயணம் பற்றி சில தகவல்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். சீன அதிபருடனான பயணத்தை வெற்றிகரமாக அமைத்துக் கொடுத்த தமிழகத்துக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, அக்டோபர் 12 ஆம் தேதி இரவே பிரதமர் மோடி தனது ட்விட்டரில், ‘நான் இன்று காலை வாக்கிங் சென்றபோது கையில் வைத்திருந்த பொருள் பற்றி நிறைய பேர் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அது என்னவென்றால் அக்கு பிரஷர் ரோலர். அதை நான் அடிக்கடி கையில் வைத்திருப்பேன். அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்’ என்று கூறியிருந்தார்.

அக்டோபர் 19 ஆம் தேதியன்று கோவளம் கடற்கரையில் அன்று தான் எழுதிய கவிதையின் தமிழாக்கத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டார் மோடி. ’அலைகடலே அடியேனின் வணக்கம்’ என்று தொடங்கும் கவிதையை தமிழகத்தில் பலரும் ரசித்து வரவேற்று வருகின்றனர். நடிகர் விவேக் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் மோடியின் கவிதையை வரவேற்றுப் பதிவிட, ட்விட்டரிலேயே அதற்கு மோடி பதிலளித்துள்ளார்.

இந்தப் பின்னணியில்தான் டெல்லியில் இருந்து கிடைத்திருக்கிறது இன்னொரு மோடி ஸ்பெஷல் தகவல்.

“தமிழகத்தின் மீது பாஜகவும் மோடியும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் பழைய தகவல். கண் வைத்து காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் புதிய தகவல். அதிமுகவோடு கூட்டணி, திமுகவோடு கூட்டணி என்றெல்லாம் வைத்துப் பார்த்தாகிவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் பாஜக சுயமாக காலூன்றிவிட்டது என்ற வரலாற்றைத் தன் காலத்தில் எழுத மோடியும், அமித் ஷாவும் நினைக்கிறார்கள்.

அதற்கான ஒரு கருவிதான் மாமல்லபுரத்துக்கு சீன அதிபரோடு வந்த பயணம். இதுபோன்ற பயணங்களால் மட்டுமே அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்துவிட முடியாது என்பது மோடிக்குத் தெரியும். ஆனால் பொதுமக்கள் மனத்தில் மோடி பற்றிய நேர்மறை பிம்பங்களை இந்த மாமல்லபுரம் பயணம் உருவாக்கியிருக்கிறது என்பதே மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் ரிப்போர்ட்.

இதையடுத்து தமிழகத்தைக் குறிவைத்து இதேபோன்ற சில நாடுகளுடனான முறைசாரா உச்சி மாநாட்டை நடத்துவது என்ற ஆலோசனை மத்திய அரசு வட்டாரத்தில் முதல் கட்டமாக நடந்துகொண்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். அப்போது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினை சந்தித்துப் பேசினார். இந்திய- ரஷ்ய நாடுகளின் 20 ஆவது வருடாந்திர சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பின் போது வரும் 2020 ஆம் ஆண்டு மே மாதம் ரஷ்யாவில், ‘சோவியத் யூனியன் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ளுமாறு மோடியை புதின் அழைத்தார். அதை ஏற்றுக் கொண்ட மோடி, ‘இந்திய ரஷ்ய நாடுகளின் அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர சந்திப்பை இந்தியாவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு புதின் வரவேண்டும்’ என்று அழைத்திருக்கிறார். இந்தத் தகவலை இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.

இப்போது டெல்லியில் நடக்கும் ஆலோசனை என்னவென்றால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்தியா- ரஷ்ய வருடாந்திர சந்திப்பையும் தமிழகத்திலேயே நடத்த வேண்டும் என்பதுதான்.

பல்லவர் சிற்பக் கலை நகரமாக விளங்கும் மாமல்லபுரத்தைப் போல, அடுத்த வருடம் மோடியின் ரஷ்ய அதிபருடனான சந்திப்பை மதுரையிலோ அல்லது தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற இடத்திலோ வைக்கலாமா என்பது பற்றிய ஆலோசனை இப்போது துவக்க நிலையில் இருக்கிறது.

மேலும் இதுபோன்ற சில வெளிநாட்டுத் தலைவர்களுடான சந்திப்பை தமிழகத்தின் சோழ பூமியான தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், சிலப்பதிகார புகழ் பூம்புகார் ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் நடத்தவும் மத்திய அரசு வட்டாரங்கள் ஆரம்ப கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன” என்கிறார்கள் பாஜகவின் மூத்த தலைவர்கள்.

பல்லவ நாட்டைப் ‘பிடித்து’ப் போன மோடி, அடுத்து பாண்டிய நாட்டையும், அப்படியே சோழ நாட்டையும் குறி வைக்கிறார். அடுத்த வருடம் வரை அவகாசம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

**ஆரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share