திமுக பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டங்களைத் தமிழ்நாடு முழுவதும் திமுக நடத்தி வருகிறது. இந்த வகையில் தர்மபுரியில் நேற்று (நவம்பர் 16) நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் நாட்டுப் பிரச்சினைகளைவிட தன் மீதான தனிப்பட்ட பிரச்சினைகளுக்கே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.
சுமார் ஒருமணி நேரம் பேசிய மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதா ஆட்சியில் ஊடகங்கள் பயந்துகொண்டிருந்தன. ஆனால், இப்போது எடப்பாடி ஆட்சியில் பயம் மட்டுமல்ல; வியாபார மிரட்டல்களும் வருகின்றன. நான் நினைப்பது போல நீ செய்தி போடவில்லையென்றால் அரசு விளம்பரம் வராது, கேபிளில் உன் டிவி வராது என்று ஊடகங்களுக்கு மிரட்டல்.
நீட் தேர்வு வந்த காரணத்தால் அரியலூர் பகுதியில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். அந்தத் தற்கொலைக்கு யார் பொறுப்பு? அதை துணிச்சலோடு விவாதம் நடத்துகிறார்களா ஊடகங்கள்? அதே நீட் தேர்வில் ஆள் மாறாட்டம், லஞ்சம், ஊழல் நடந்திருக்கிறது. இதுபற்றி விமர்சிக்கிற தகுதி ஊடகங்களுக்கு ஏன் இல்லை?
டிஎன்பிஎஸ்சியில் வெளிமாநிலக்காரர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அதை எதிர்த்து விவாதிக்க ஊடகங்கள் ஏன் முன் வரவில்லை?
தமிழகத்தில் மத்திய அரசின் துறைகளில் வடஇந்தியர்கள் பெருகுகிறார்கள். அதை ஏன் தட்டிக் கேட்கவில்லை ஊடகங்கள்?
நான் செயல் தலைவராக ஆனபோதே பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளேன். தொடர்ந்து சொல்லியுள்ளேன். முடிந்தவரை கடைப்பிடித்திருக்கிறேன் முழுமையாக அல்ல. சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் அதிமுக பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இறந்தார். அதுபற்றி ஊடகங்கள் விவாதிக்கிறதா?
நான்கு நாட்களுக்கு முன்னால் முதல்வர் எடப்பாடி நிகழ்ச்சிக்கு நடப்பட்ட அதிமுக கொடிக் கம்பம் விழுந்து இளம்பெண் விபத்தில் சிக்கி காலை இழந்துவிட்டார் என்று செய்தி வந்திருக்கிறது. நான் கேட்கிறேன் இதையெல்லாம் பெரிதாக்கி விவாதிப்பதற்கு ஊடகங்கள் ஏன் முன்வரவில்லை?
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு பற்றி விவாதித்ததுண்டா? ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலுக்காக 89 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் சம்பந்தம் என்று நானா சொன்னேன்? வருமானவரித் துறை கூறியது. நீதிமன்றத்தில். அதுபற்றி என்றைக்கேனும் தப்பித் தவறி ஊடகங்களில் விவாதித்திருக்கிறீர்களா?
எடப்பாடி அரசுக்கு எதிராக ஓட்டுப் போட்ட ஓபிஎஸ் உட்பட 11 பேர் பதவி இன்னும் அப்படியே இருக்கு. அந்தத் தீர்ப்பு என்னாச்சு என்ற விவாதம் நடந்திருக்கா?
ஜெயலலிதா மரணத்தில் விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் பற்றிய விசாரணை என்னாச்சு? விவாதம் நடத்த தெம்பிருக்கா?
ஆனால், திமுக மீது மட்டும்தான் விமர்சனம். சிறை என்றால் என்னவென்று தெரியாதவர்கள், சித்ரவதை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் ஸ்டாலினை கேள்வி கேட்க எந்தத் தகுதியும் கிடையாது.
நான் என்ன ஊழல் செய்துவிட்டா, கொலை செய்துவிட்டா, கொள்ளையடித்துவிட்டா சிறை சென்றிருக்கிறேன்? நாட்டுப் பிரச்சினைக்காகத்தான் சிறை சென்றிருக்கிறேன்” என்று சரமாரியாகக் கேள்விகளை அடுக்கினார் மு.க.ஸ்டாலின்.
“நாட்டில் நடப்பது எதுவும் எடப்பாடிக்குத் தெரியாது. ஆனால் எதில் கமிஷன் அடிக்கலாம் என்பது மட்டும் தெரியும், கடப்பாறையை விழுங்கிவிட்டு ஒன்றும் தெரியாத மாதிரி இருக்கிறார் எடப்பாடி. இன்று நாட்டில் எல்லா தரப்பு மக்களும் பணப் புழக்கம் இல்லாமல் சோகத்தில் இருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. பணப்புழக்கமே இல்லை. அமைச்சர்களிடம் மட்டும்தான் பணப்புழக்கம் இருக்கிறது. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்குப் பணத்தட்டுப்பாடு இப்போது இருப்பதாக வட இந்தியப் பத்திரிகைகள் சொல்லியிருக்கிறார்கள்.
திமுக பொதுக்குழுவின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், திமுக போராட்டம் நடத்தும். சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும். தமிழகம் மிகப்பெரிய பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது. அதை மீட்கும் போராட்டம் வெற்றியடையும்போது திமுக கோட்டையில் இருக்கும், இப்போது கோட்டையில் இருப்பவர்கள் சிறைச்சாலையில் இருப்பார்கள்” என்று முடித்தார் ஸ்டாலின்.�,