iதிண்ணைப் பிரச்சாரம் தொடங்கிய ஸ்டாலின்

Published On:

| By Balaji

இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நாங்குநேரி தொகுதியில் இன்று (அக்டோபர் 8) தனது திண்ணைப் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

நாளை பிரசாரக் கூட்டங்களில் பேசுவதற்காக இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் நாங்குநேரிக்கு வந்து சேர்ந்த ஸ்டாலின், பாளையங்கோட்டை ஒன்றியத்திலுள்ள பாளையம் செட்டிகுளம் கிராமத்தில் பெண்களை சந்தித்துப் பேசி தனது திண்ணைப் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.

பாளையம் செட்டிகுளம் கிராமத்துக்கு வேட்பாளர் ரூபி மனோகரன், திமுக துணைப்பொதுச் செயலாளரும், தொகுதிப் பொறுப்பாளருமான ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

வேட்பாளர் ரூபி மனோகரனைத் தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்ட ஸ்டாலின் முதலில், ‘இந்த தொகுதியில நடக்கப் போற இடைத்தேர்தல்ல வேட்பாளரா யாரு நிக்கிறாங்கனு தெரியுமா?’ என்று கேட்டார்.

அப்போது மக்கள் ரூபி மனோகரனைக் காட்டி, “இவர்தான் வேட்பாளர் கை சின்னத்துல நிக்கிறாரு. உங்க கூட்டணியிலதான் நிக்கிறாரு” என்றதும் மகிழ்ந்த ஸ்டாலின், ‘நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க. இப்ப நீங்கதன என்கிட்ட பேசப் போறீங்க. பேசுங்க’ என்று சொன்னதும், பெண்கள் உட்பட பலரும் தத்தமது குறைகளை ஸ்டாலினிடம் பட்டியலிட்டனர்.

ஒரு நாள் விட்டு ஒருநாள்தான் தண்ணீர் வருகிறது, ஓஏபி வரவில்லை என்பன உட்பட பல புகார்களை ஸ்டாலினிடம் அடுக்கினர். அவர்களிடம், ‘இங்கே யாராவது மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்தவங்க இருக்கீங்களா?’ என்று கேட்க, ஒரு பெண் எழுந்தார்.

“சுய உதவிக் குழு நல்லா செயல்படுதா?” என்று கேட்க, “கடன் சரியா கொடுக்க மாட்டேங்குறாங்க” என்று புகார் வாசித்தார் அந்த பெண். அப்போது ஒரு ஆண் எழுந்து, “மகளிர் சுய உதவிக் குழுக்களை விட இப்போ மைக்ரோ ஃபைனான்ஸ் காரங்கதான் கிராமங்களுக்குள்ள புகுந்துட்டாங்க. எப்படியாவது அவங்கிட்ட இருந்து கிராமங்களை காப்பாத்துங்க” என்று ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தார்.

தொடர்ந்து மக்களிடையே பேசி வாக்கு சேகரித்த ஸ்டாலின், “நீங்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகள் எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும். அதற்கு அச்சாரமாக இப்போது நீங்கள் திமுக கூட்டணியில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

ஸ்டாலினின் திண்ணைப் பிரச்சாரம் இன்று மாலை ஆரம்பித்துத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share