அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு ஸ்டாலின், தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கு இன்ஸ்டிட்யுஸன் ஆப் எமினன்ஸ் என்ற சிறந்த அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் வழங்கியது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “அண்ணா பல்கலைக் கழகத்தை இன்ஸ்டிட்யுஸன் ஆப் எமினன்ஸ் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் என்றும் இரண்டாகப் பிரிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது” என்று தெரிவித்தது.
பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆராய அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.வி. அன்பழகன் ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “தி.மு.க ஆட்சிக்காலத்தில் மாணவர்கள் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்தபோது கடுமையாக எதிர்த்த அ.தி.மு.க, இப்போது அதே அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் தாரைவார்ப்பதற்காகவே ஒரு குழுவினை அமைத்திருப்பது, மாநில அரசிடம் உள்ள பல்கலைக்கழகத்தைக் கொல்லைப்புற வழியாகவே மத்திய அரசிடம் ஒப்படைக்கவும், காலப்போக்கில் அண்ணா பெயரை அகற்றவும், அமைக்கப்பட்ட குழுவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ‘சிறப்பு அந்தஸ்து தருகிறோம்’ என்று ஒரு சலுகையைக் காட்டி தமிழகத்திலுள்ள முக்கியமானதொரு பல்கலைக்கழகத்தை அதிலும் குறிப்பாக அதிக பொறியியல் கல்லூரிகள் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தைத் தன் வசமாக்கிக் கொள்ள மத்திய அரசு தீவிரமாகத் திட்டமிட்டு செயல்படுகிறது. இதன்மூலம் அந்தப் பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது” என்று குற்றம்சாட்டினார்.
அதிமுக அரசு நியமித்துள்ள இந்த ஐந்து அமைச்சர்கள் குழுவில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், “மத்திய பா.ஜ.க அரசு, மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்தைத் தவிர்த்து, கல்வி மேம்பாட்டிற்கான நிதியினை நேரடியாக மாநில அரசுக்கு வழங்கி, கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அமமுக பொதுச் செயலாளர் தினகரன், “பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மொத்தமாக மத்தியப் பட்டியலுக்கு மாற்றும் விதமாக உயர்கல்வி நிறுவனங்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சியை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. இதன் மூலம் கல்வித் தரத்தில் மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடும்போது இப்போது முன்னணியில் இருக்கும் தமிழகம் பெரிய அளவுக்கு பாதிப்பைச் சந்திக்கும் ஆபத்து உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “பல்கலைக்கழகங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு திட்டவட்டமாக எதிர்க்க வேண்டும். சட்டரீதியாக தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அதன்படி செயல்படவும் வேண்டும். மேலும் தேசிய அளவில் இத்தகைய பாதிப்பைச் சந்திக்கும் மற்ற மாநில அரசுகளுடன் ஒன்று சேர்ந்து இந்நடவடிக்கையில் இருக்கும் சிக்கல்களை மத்திய அரசுக்குத் தெளிவுபடுத்துவதற்கான பணிகளையும் செய்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
�,