பெட்ரோலில் எத்தனால்: ஒன்றிய அரசின் முடிவு சரியானதா?

Published On:

| By admin

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வு தொடர்ந்து மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்திவரும் சூழலில் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் ரூ.40,000 கோடிக்கும் மேல் மிச்சமாகியுள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது சரியான முடிவுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து வாகனப் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கச்சா எண்ணெய் விஷயத்தில் நாம் பெரும்பான்மையாக இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பதால் பெருமளவிலான அந்நிய செலாவணி செலவாகும் நிலை உள்ளது. மேலும், வாகனப் பயன்பாடுகளின் அதிகரிப்பால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய நிலையில் பல்வேறு காரணங்களை முன்வைத்து பெட்ரோலில் எத்தனாலை கலப்பது என்று திட்டமிடப்பட்டது.
பெட்ரோலில் 22.5% அளவு வரை எத்தனாலைக் கலக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்தார். பெட்ரோலில் எத்தனாலை கலப்பது பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் நடைமுறைப்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.
இந்த நிலையில் 2025-க்குள் 20 சதவிகிதம் எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் 2022-க்குள் 10 சதவிகிதம் எத்தனால் கலக்க இலக்கு வைக்கப்பட்டது. இந்த இலக்கை பெட்ரோலிய நிறுவனங்களின் ஒத்துழைப்பினால் ஐந்து மாதங்களுக்கு முன்பே எட்டிவிட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெட்ரோலில் எத்தனால் கலந்ததன் மூலமாக ரூ.40,000 கோடி மதிப்பிலான அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அடிப்படையில் பார்க்கும்போது எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டினால் 27 லட்சம் டன்னாக கார்பன் உமிழ்வு குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
2025-க்குள் 20 சதவிகித எத்தனால் கலப்பு இலக்கை எளிதில் எட்டிவிடுவோம். அதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். அந்தப் பணத்தை விவசாயிகளின் நலனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தலாம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எத்தனால் என்பது கரும்பு சக்கையில் இருந்து கிடைக்கும் ஒரு ஆல்கஹால். இதை பெட்ரோலுடன் கலந்தால், கரும்பு விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் உள்ள வாகனங்களின் எஞ்சின்களில், 10 சதவிகிதத்துக்கு மேல் ஆல்கஹாலை எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது.
அப்படி பயன்படுத்தினால், என்ஜினில் உள்ள அலுமினிய பாகங்கள், பெட்ரோல் என்ஜினுக்கு கொண்டு செல்லும் ரப்பர் பாகங்களை, பெட்ரோல் டேங்க் போன்றவற்றை எத்தனால் அரித்துவிடும். இதன் காரணமாகவே, 13 ஆண்டுகளுக்கு முன்னர் 5 சதவிதத்தில் தொடங்கி தற்போது 10 சதவிதம் என்ற அளவில் உள்ளது.
இதில் ஒரு முரண்பாடான விஷயம் உண்டு. ஒன்றிய அரசின் மாற்று எரிபொருள் கொள்கையில், 20 சதவித எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 10 சதவிதத்துக்கு மேல் எத்தனாலை நம் இந்திய வாகனங்கள் தாங்காது என்கிறபோது, 20 சதவிதம் சாத்தியமா என்பது கேள்விக்குறியே!

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share