�நாகாலாந்தைச் சேர்ந்த மிஸ் கோஹிமா போட்டியாளர், இந்தியப் பிரதமருடன் என்ன விவாதிக்க விரும்புகிறீர்கள் என்று நடுவரால் கேட்கப்பட்டபோது, அவர் அளித்த பதில் பார்வையாளர்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது.
அக்டோபர் 5ஆம் தேதி நாகாலாந்தின் தலைநகரான கோஹிமாவில் மிஸ் கோஹிமா போட்டி நடைபெற்றது. இந்த அழகிப் போட்டியில் விக்கோனுவோ சச்சு என்ற போட்டியாளரும் கலந்து கொண்டிருக்கிறார். இந்தப் போட்டியின் கேள்வி பதில் சுற்றின்போது, விக்கோனுவோ சச்சுவிடம் நடுவர்களில் ஒருவர், பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு அழைக்கப்பட்டால் நீங்கள் மோடியிடம் என்ன சொல்வீர்கள் என்ற சுவாரஸ்யமான ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு நாகாலாந்து அழகி அளித்த பதில், அவரை சமூக வலைதளங்களில் நட்சத்திரமாக்கியிருக்கிறது.
18 வயதான விக்கோனுவோ சச்சு நடுவரின் கேள்விக்கு, “இந்தியப் பிரதமருடன் பேச என்னை அழைத்தால், மாடுகளுக்குப் பதிலாகப் பெண்கள்மீது அதிக கவனம் செலுத்தும்படி அவரிடம் கூறுவேன்” என்றார். அவரது பதில் கூட்டத்திலிருந்த பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பையும் உற்சாகத்தையும் நீண்ட நேரத்திற்கு வரவழைத்திருக்கிறது.
இந்த வீடியோ பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டும், அதிகமாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகிறது. மேலும், இந்தப் போட்டியில், நாகாலாந்து அழகி சச்சு ரன்னர்-அப் (இரண்டாவது இடம்) ஆக முடிசூட்டப்பட்டார்.
�,”