விஜயகாந்தை மட்டும் சந்தித்த அமைச்சர்கள்: காரணம் என்ன?

Published On:

| By Balaji

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் ஆதரவு கேட்டு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர்.

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பாக நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும் போட்டியிடுவார்கள் என நேற்று அறிவிக்கப்பட்டது. இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு முழுமையாகப் பணியாற்றுவோம் என கூட்டணிக் கட்சிகளான பாமக, தமாகா ஆகியவை அறிவித்துவிட்டன. ஆனால், தேமுதிக, பாஜக ஆகியவை தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தன.

இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்திலுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் இல்லத்துக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் நேற்று (செப்டம்பர் 25) சென்றனர். விஜயகாந்துக்குப் பொன்னாடை அணிவித்து, அவருடைய உடல்நலம் குறித்தும் அக்கறையாக விசாரித்தனர். அதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என விஜயகாந்திடம் கேட்டுக்கொண்டனர். சுமார் அரை மணி நேரம் வரை இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. அப்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் 25.09.2019 மாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடைபெறவிருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினார். அமைச்சர்களும் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற கட்சிகளையெல்லாம் நேரில் சந்தித்து ஆதரவு கோராத அதிமுக, தேமுதிகவிடம் மட்டும் நேரில் சந்தித்து ஏன் ஆதரவு கோரியது என்று விசாரித்தோம்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக, தமாகா ஆகியவை அதிமுக கேட்பதற்கு முன்பாகவே ஆதரவை அறிவித்துவிட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, “இடைத் தேர்தல் தொடர்பாக அதிமுகவினர் வந்து விஜயகாந்த்திடம் பேச வேண்டும். அதிமுகவினர் வந்து பேசிய பிறகுதான் எங்களுடைய முடிவை அறிவிக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

தேமுதிகவுக்கு அதிமுக தரப்பிலிருந்து முக்கியத்துவம் தரப்படவில்லை எனக் கருதிய பிரேமலதா, பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவரைத் தொடர்புகொண்டு நேரடியாகவே தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் செய்தியாளர்களிடம் அவ்வாறு பேட்டியளித்தார். இதனையடுத்து அந்த பாஜக தலைவர் முதல்வரைத் தொடர்புகொண்டு, ‘தேமுதிகவுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என பிரேமலதா சொல்கிறார். அவர்களும் நமக்குத் தேவை. எனவே, அனுசரித்துச் செல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதனையடுத்துதான் விஜயகாந்தை போனில் தொடர்புகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இடைத் தேர்தலுக்கு ஆதரவு கோரியுள்ளார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில், அமைச்சர்கள் மூவரும் விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக அமைச்சர் ஒருவர் தனக்கு நெருக்கமான வட்டாரங்களில், “தேமுதிகவின் பலம் என்ன என்பது கடந்த தேர்தல்களிலேயே தெரிந்துவிட்டது. இருந்தாலும் மற்ற கட்சிகளைவிட நாங்கள்தான் பெரியவர்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறது தேமுதிக. தற்போது நடைபெறவுள்ளது இடைத் தேர்தல். அதில் ஓர் ஓட்டின் மதிப்புகூட பெரியதுதான். அப்படிப்பட்ட நிலையில் தேமுதிகவின் ஆதரவை இழக்க விரும்பாமல்தான் நேரில் சந்தித்து ஆதரவு கோரினோம்” என்று தெரிவித்திருக்கிறார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share