சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க இதுதான் சரியான வாய்ப்பு என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் எல்லை பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இந்தியாவில் சீன பொருள்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் (ஜூன் 29) டிக் டாக், வி சாட், யுசி பிரசர், ஹெலோ உள்ளிட்ட 59 சீன நிறுவன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் டிக் டாக் பயனர்கள் தற்போது அதற்கு மாறான செயலிகளைத் தரவிறக்கம் செய்து கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில் இந்திய செயலிகளான roposo, chingari ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. chingari -ஐ, ஒரு மணி நேரத்திற்கு லட்சத்தும் அதிகமானோர் டவுன் லோடு செய்து வருகின்றனர். இந்த சூழலில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்நாட்டில் வளர்ச்சி அடைய, புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தச் சரியான தருணம் என்று ஐடி துறை வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
புதிய செயலிகளுக்கான தேவை ஏற்பட்டுள்ள இந்த சூழலில், தகவல் தொழில் நுட்பத் துறையினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் எஸ் பி வேலுமணி, “59 சீன செயலிகள் மீதான மத்திய அரசின் தடை, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய மற்றும் புத்தாக்க செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு சரியான வாய்ப்பு என்று கருதுகிறேன். கோவை உள்ளிட்ட தொழில்நுட்ப நகரங்களில் உள்ள தொழில் முனைவோர் இதைப் பயன்படுத்தி தொழில் நுட்ப வேலைகளைப் பெரிய அளவில் உருவாக்கிட வேண்டும்.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பயணிக்கக் காத்திருக்கும் இந்திய இளைய தலைமுறையினரின் ஆவலைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இந்தியச் சமூக வலைதள விரும்பிகள் மீண்டும் அயல்நாட்டு சமூக வலைதளங்களை நாடாமல் இருக்க, உள்நாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தொழில் வளத்தைப் பெருக்கி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று யோசனை வழங்கியுள்ளார். இது, தமிழக தொழில் முனைவோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
**-கவிபிரியா**�,