நீர்வழித்தடங்களில் ஏதாவது ஆக்கிரமிப்பு இருப்பதாக தெரிந்தால், அதுகுறித்து அரசுக்கு தெரிவிக்கலாம். அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நோய் தடுப்பு பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(நவம்பர் 14) தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”முதல்வர் ஆலோசனையின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா தடுப்பூசி முகாம் மற்றும் இல்லம் தேடி தடுப்பூசி திட்டம் நல்ல பயனை அளித்துள்ளது. இன்று நடைபெறும் எட்டாவது மெகா தடுப்பூசி முகாமில் 15 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 75 சதவிகிதம் பேர் முதல் டோஸையும், 33 சதவிகிதம் பேர் இரண்டாம் டோஸையும் செலுத்தியுள்ளனர். இம்மாத இறுதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் முதல் டோஸை செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 கோடியே 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுக்கி விழுந்த இடத்தில் எல்லாம் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மக்கள் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சென்னையில் மழைக்கு பிறகு நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் கொசு மருந்து அடிக்கும் பணியில் 1300 இயந்திரங்கள், 3400 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து இடைவிடாது பெய்த மழையினால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கியுள்ளது. சென்னையில் நாள்தோறும் ஐந்தாயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுவந்த நிலையில், மழையால் கடந்த இரண்டு நாட்களில்14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
மழை நமக்கு பாடத்தை கற்று கொடுத்துள்ளது. அடுத்த மழைக்கு பாரதிதாசன் நகர், ஈக்காட்டுத்தாங்கல் , அண்ணா நகரில் மழை நீர் தேங்காது. பட்டாளம், டமலஸ் சாலை கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு என்பது வேறு, காலம் காலமாக அங்கேயே குடியிருப்பது என்பது வேறு.
வருங்காலத்தில் மழைநீர் தேங்காமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கவும், அதற்கான திட்டம் தயாரிக்கவும் 14 பேர் கொண்ட குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். இக்குழு சென்னையில் எங்கெல்லாம் புதிதாக மழைநீர் வடிகால் கட்ட வேண்டும். மழைநீர் பாதிப்பு எங்கு ஏற்பட்டது. எங்கெல்லாம் மழைநீர் தேக்கம் உள்ளது என்பதை எல்லாம் கண்டறிந்து, அதற்கான திட்டங்களை தயாரித்து வழங்குவார்கள்.
அதுபோன்று நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு இருப்பது உங்களுக்கு தெரிந்தால், அதுகுறித்து தெரிவிக்கலாம். நிச்சயம், அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.
**-வினிதா**
�,