q‘இது மறுபிறவி ’ : அமைச்சர் காமராஜ் கண்ணீர்!

Published On:

| By Balaji

மறுபிறவி எடுத்து பேரவைக்கு வந்துள்ளேன் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் சட்ட பேரவையில் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை விதி 110ன் கீழ், கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் ஆகியவற்றைத் தள்ளுபடி செய்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்றும் (பிப்ரவரி 27) கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மறுபிறவி எடுத்து பேரவைக்கு வந்துள்ளேன் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

கொரோனாவிலிருந்து குணமடைந்த பிறகு இன்றைய கூட்டத்தொடரில் பேசிய அவர், “மீண்டும் உயிருடன் வருவேனா என்றிருந்த நிலையில் மறுபிறவி எடுத்துள்ளேன். முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்

முன்னதாக அமைச்சர் காமராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்த நிலையில், எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது நுரையீரல் 95 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருந்தது, அவர் மீண்டு வந்தது அதிசயம்தான் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, முதல்வரும் துணை முதல்வரும் அவருடைய உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

அதுபோன்று அமைச்சர்களும் மருத்துவமனைக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தனர். இந்நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டு வந்தது மறுபிறவிதான் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் காமராஜ்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share