ஸ்டாலினை விமர்சித்த ராமதாஸ்: நன்றி தெரிவித்த அதிமுக!

Published On:

| By Balaji

பாமக நிறுவனர் ராமதாஸை, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், விக்கிரவாண்டியில் வென்ற முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

நடந்துமுடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக வெற்றிபெற்றது. விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தியைவிட 44,924 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இதற்கிடையே தேர்தல் முடிவுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலின், “ஆளும்கட்சியின் பண பலம், அதிகாரத் துஷ்பிரயோகம், சில கட்சிகள் திட்டமிட்டுக் கிளப்பிய சாதி உணர்வு ஆகியவற்றையும் மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்” என்று பாமகவை மறைமுகமாக சாடியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள ராமதாஸ், “சில கட்சிகள் திட்டமிட்டு கிளப்பிய சாதி உணர்வு தான் திமுகவின் தோல்விக்கு காரணம் என்றும், அதையும் தாண்டி திமுக அணிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வாக்களித்திருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். புளுகு மூட்டைகளின் மொத்த வணிகரிடமிருந்து வெளியாகியுள்ள புதிய பொய், புதிய பழி என்பதைத் தவிர, இதில் வேறு ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டு அரசியல் சூழலையும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களத்தையும் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வரும் அனைவருக்கும், சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? என்பது மிகவும் நன்றாகத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு திமுக செய்த நன்மைகள் தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை குற்றம்சாட்டிய ராமதாஸ், “கலப்படமில்லாத பொய்களைக் கூறி வன்னிய மக்களை ஏமாற்ற முயன்றதுடன், வன்னிய சமுதாயமே திமுகவிடம் மண்டியிட்டு யாசகம் பெற்றது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்த ஸ்டாலின் முயன்றதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், அவரது அரைவேக்காட்டு அறிக்கைக்கு ஆதாரத்துடன் பதில் அளித்தேன். திமுகவின் அரசியல் வளர்ச்சி என்பது வன்னிய மக்கள் போட்ட பிச்சை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “தேர்தலில் வெற்றி என்பது மிகவும் அவசியம் ஆகும். அதை போராடித் தான் பெற வேண்டுமே தவிர, பொய்யுரைத்து ஏமாற்றி பெறக் கூடாது. ஆனால், வெற்றிக்காக திமுக தலைவர் ஸ்டாலின் கையிலெடுப்பது எப்போதுமே இரண்டாவது அஸ்திரத்தை தான். திமுகவில் உள்ள வெள்ளை மனம் படைத்த வன்னியர்களும் மொத்தமாக சுரண்டப்படுவதற்கு முன்பாக விழித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைய வேண்டும். இதற்கெல்லாம் மேலாக இனியாவது ஏமாற்றும் அரசியலை கைவிட்டு, அறம் சார்ந்த அரசியல் செய்ய ஸ்டாலின் முன்வர வேண்டும்” என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

**ராமதாஸை சந்தித்து நன்றி தெரிவித்த அதிமுக**

இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதி வெற்றியில் பாமகவின் பங்கு அதிகமாக இருப்பதாக நினைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸை சந்தித்து நன்றி தெரிவிக்கச் சொல்லி [அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்](https://minnambalam.com/k/2019/10/25/113).

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் (அக்டோபர் 23) பிற்பகல் சந்தித்து நன்றி கூறினர். ராமதாஸிடம் முத்தமிழ்ச்செல்வன் வாழ்த்து பெற, அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார் ராமதாஸ்.

பிற்பகல் 2.50 மணிக்கு உள்ளே சென்ற அமைச்சர் உள்ளிட்ட அதிமுகவினர் 3.10 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ராமதாஸை சந்திக்க முதலில் அமைச்சர் தங்கமணி வருவதாக இருந்தது. ஆனால், அவர் நாமக்கலில் இருந்ததால் உள்ளூர் அமைச்சரான சி.வி.சண்முகமே ராமதாஸை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share